வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்த சர்ச்சை… சந்தானம் விளக்கம்!

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை என நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தின் உருவாகி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்ற கடவுள் இல்லைன்னு சொல்வானே ராமசாமி அவனா என்ற வசனம் சர்ச்சையானது.
இந்த வசனம் மூலம் பெரியாரை விமர்சித்துள்ளனர் என எதிர்ப்புகள் கிளம்பின. இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் சந்தானம், இன்று நடைபெற்ற வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விளக்கம் அளித்தார். அதுவும் இந்த திரைப்படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா, நடிகர் சந்தானத்தின் நட்பு மற்றும் ஹீரோவாக நடிப்பதற்கு சந்தானத்திற்கு வழங்கிய டிப்ஸ் உள்ளிட்ட விஷயங்களை சுவாரசியத்தோடு பகிர்ந்து கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் சந்தானம் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். அத்துடன் ஆர்யாவுடன் இணைந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தார். அதேபோல் ஆர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் யோகி யோகி என்று சொல்லாதே கார்த்திக்கு யோகி என்று சொல். ஏற்கனவே சர்ச்சையாக இருக்கிறது என நகைச்சுவையாக பேசினார் சந்தானம்.
ஆர்யாவை போலவே நடிகை மேகா ஆகாஷையும் சந்தானம் மேடையில் கலாய்த்தார். இவர்களை தவிர வடக்குப்பட்டி ராமசாமி பாடல் வெளியீட்டு விழாவில் தெலுங்கு நடிகர் அல்லு சிரீஷ், மற்றும் தமிழ் இயக்குனர்கள் மடோன் அஸ்வின், ஸ்ரீ கணேஷ், நடிகர்கள் தமிழ், சேஷு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.