மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா?
இந்தியாவில் தற்போது புதியவகை கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 614 பேரிடம் இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் இப்போது 2,311 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை ஆகும். இதுவரை அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2014ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாநிலங்களுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் வைரஸின் வளர்ந்து வரும் தன்மையை மதிப்பாய்வு செய்வது குறித்து வலியுறுத்தினார். கூட்டத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் உறுதியளித்தார்.
தொற்றுநோய்களின் எண்ணிக்கை தற்போது சற்று குறைவாக தோன்றினாலும் சிங்கப்பூர் தொடர்ந்து எச்சரிக்கையுடன் உள்ளது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த வாரம் கொரோனா பாதிப்பில் 75 சதவீதம் அதிகரித்து, முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட 32,035 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது 56,043 தொற்று எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
புதிய உருமாறிய JN1 வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அனைத்து உலக நாடுகளும் இதை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.