மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.! முதலிடத்தில் உச்சம் தொட்ட கேரளா.!

மக்கள் மறந்து இருந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நினைவூட்ட உருமாறி வந்துள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) புதியதாக 328 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பால் 2,669 என்று இருந்த பாதிப்பு எண்ணிக்கை 2,997ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் அதிகபட்சமாக 265 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2606ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெளியான தகவல் படி நேற்று முன்தினம் கேரளாவை சேர்ந்த மூன்று பேர், கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த ஒருவர் கொரோனவால் உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 5,33,327 ஆக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று கேரளாவில் மட்டும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,33,328ஆக உயர்ந்துள்ளது.

புதிய வகை கொரோனா மாறுபாட்டை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் பீதி அடையத் தேவையில்லை என்றும், மாநிலங்கள் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் கூறியுள்ளார்.

கோவிட் 19 – ஜே.என் 1 அறிகுறிகள் :

பொதுவான காய்ச்சல் அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி ஆகியவை அடங்கும்.
சிலருக்கு லேசான வயிற்றுவலி அறிகுறிகளும் தென்படும்.
சிலருக்கு நோயாளிகள் லேசான மேல் சுவாச கோளாறு அறிகுறிகள் தென்படும். இது பொதுவாக நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் மேம்படும்.
உடல் சோர்வு, பசியின்மை, குமட்டல், சுவை அல்லது வாசனை தெரியாமல் இருத்தல் ஆகியவையும் அடங்கும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *