மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா பரவல்; மத்திய அரசு முக்கிய உத்தரவு
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது கவலை அளித்துள்ளது.
இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90 விழுக்காடு கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் 300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 2,669 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா பரவி வரும் சூழலில், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்.
கொரோனா பரவல் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் விழிப்புடனும் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.