உலகின் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகள்… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக நாடுகளில் பெரும்பாலானவை ராணுவப் படையைக் கொண்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான ராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.

தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு நாட்டின் ராணுவப் படையுமே உரிய பயிற்சிகளுடன் வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சில நாடுகளின் ராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமீபத்தில், மிரர் நவ் வெளியிட்ட செய்தியின்படி உலகிலேயே மிகவும் வலிமையான ராணுவப் படையை கொண்ட நாடு அமெரிக்கா என்று கூறப்பட்டுள்ளது. சரி இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது?

குளோபல் ஃபையர்பவர் இந்த ஆண்டுக்கான வலிமையான ராணுவப் படையை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 145 நாடுகளில் உள்ள ராணுவப் படைகளின் பலம் பலவீனங்களை ஆய்வு செய்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் அதிக சக்தி வாய்ந்த ராணுவ படை கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய ராணுவம், இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவை விட மூன்று நாடுகள் வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தியா, உலகில் நான்காவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் GFP வெளியிடும் இந்தப் பட்டியல், ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புக்கு துணைபுரியும் ராணுவத்தின் பலம் எவ்வளவு என்பதை வெளிக்காட்டுகிறது.

GFP வெளியிட்ட கூடுதல் விவரங்கள்

குறைந்தபட்சம் கடந்த 10 ஆண்டுகளாக, மிகவும் வலிமையான மிலிட்டரி கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. உலக அளவில் மிகப்பெரிய டிஃபென்ஸ் பட்ஜெட் கொண்டது. அமெரிக்கா ராணுவத்துக்கு $761.7 பில்லியன் ஒதுக்குகிறது.

கடந்த ஆண்டு GFP பட்டியலுடன் ஒப்பிடும்போது, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளுமே அதே இடத்தை தக்கவைத்துள்ளன.

இந்தியா 15 லட்சம் செயல்படும் ராணுவ வீரர்களும், 5.94 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டும் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு 8 ஆவது இடத்தில் இருந்த யுனைடட் கிங்டம், இந்த ஆண்டு 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு 6 ஆம் இடத்தில் இருந்த தென் கொரியா, இந்த ஆண்டும் அதே இடத்தில் இருக்கிறது.

9 ஆம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் ராணுவம், இந்த ஆண்டு 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு இருந்த இடங்களில் இருந்து ஜப்பான் 8 ஆம் இடத்திலும், ஃபிரான்ஸ் 9 ஆம் இடத்திலும் சரிந்துள்ளது.

10 வது இடத்தில் இத்தாலி இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் ராணுவ யூனிட்டுகளின் தரம், பிரிவுகள், ராணுவ பட்ஜெட், நிதி நிலைமை, லாஜிஸ்டிக்ஸ் திறன், இருப்பிடம், உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருப்பது, பூட்டான். பலவீனமான ராணுவங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சோமாலியா, மத்திய ஆப்பிரிக்கா, மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *