Couples: தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!
உறவில் கலகலப்பாக இருப்பது முதல் ஒன்றாக நட்பை வளர்ப்பது வரை, தம்பதிகளுக்கு இடையேயான உறவை வலுவாக பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வாழ்வில் யதார்த்தங்களைப் புரிந்துகொண்ட இருவர் திருமணபந்தத்தில் ஒன்று சேரும்போது, அவர்கள் உறவில் அதிக பொறுமையாகவும், அதிக புரிதலுடனும், விசுவாசமாகவும் இருக்க கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
இப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்திருக்கும் தம்பதிகள், தங்களுக்கு இடையே உருவாகும் கருத்துவேறுபாடுகளை, திறமையாக எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, ஒவ்வொருத்தர் பேசிய விசயங்களில் இருந்து நேர்மறையானவற்றை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆரோக்கியமான உறவினைப் பேண உதவுகிறது.
இதுதொடர்பாக ரிலேஷன்ஷிப் நிபுணர் ஜூலி மெனனோ, தம்பதிகள் உறவில் வலுவாக இருக்க சில வழிகளைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, இருவரும் ஒருவரது குறைகளையும் சுய பாரங்களையும் மற்றொருவர் மீது சுமத்துவதில்லை. மாறாக அவர்கள் தங்கள் உறவை வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க கற்றுக்கொள்கிறார்கள். அப்படிதான், ஒரு தம்பதியினர் இருக்கவேண்டும். கணவரின் குடும்பத்தைப் பற்றிய குறைகளை மனைவியோ அல்லது மனைவியின் குடும்பத்தைப் பற்றிய குறைகளை கணவரோ நேரிடையாகவோ, உறவினர்களிடமோ சொல்லாமல் இருக்கவேண்டும். பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயங்களில் இருந்தும் யதார்த்தத்தையும் வளர்ச்சியையும் நோக்கிய கருத்துகளை வாழ்க்கைத் துணையுடன் இருந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒருவரையொருவர் நம்பி, மேலும் நம்பகத்தன்மையுடன் இணைந்து பணியாற்றுவது உறவில் ஒரு முக்கிய அம்சமாகும். குறிப்பாக, கணவருக்குத் தெரியாத விஷயங்களை மனைவியும்; மனைவிக்குத் தெரியாத விஷயங்களை கணவரும் ஒருவருக்கொருவர் சொல்லித்தரவேண்டும். சரியாக செய்தால் துணையைப் பாராட்டவேண்டும். ஒருவருக்கொருவர் ஆர்வமாக இருப்பது ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
சில நேரங்களில் திருமண பந்தத்தில் கலகலப்பாக இருப்பதும் முக்கியம். ஒன்றாக கலகலப்பாக இருப்பது மற்றும் வேடிக்கையாக இருப்பது நல்ல நினைவுகளை தம்பதியரிடையே சேர்க்கிறது. இது இருவருக்கும் இடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது.
முதலில் உறவின் தொடக்க நிலை நட்புதான். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரோக்கியமான நட்பை வளர்த்துக்கொள்வதும், ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதும், வெளியில் செல்வதும் உறவில் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது.
குடும்பத்தின் வேலைச்சுமைகளை இருவரும் பகிர்ந்து செல்வது உறவு மேம்பட உதவும். மளிகைச் சாமான்கள் வாங்க மார்க்கெட் செல்வது, சமைப்பது, காய்கறிகளை நறுக்குவது ஆகியவை கூட இதில் அடங்கும்.