COVID-19: அதிகரிக்கும் கொரோனா தொற்று – செய்யவேண்டியவை என்ன?
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவிட் வைரஸின் திரிபான JN.1 நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விடுமுறை காலத்தில் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க வழிகள் உள்ளன.
மேற்கத்திய நாடுகளில் இது விடுமுறைக்காலம் மட்டுமல்ல குளிர்காலமாகவும் இருப்பதால் மீண்டும் கொரோனா தலைதூக்குகிறது. கோவிட் உண்மையில் நம்மை விட்டு விலகவில்லை.
இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரான ராஜீப் தாஸ்குப்தா கூறுகையில், “விடுமுறைக் காலம் இது என்பதால் பயணங்களும் அதிகம் நடைபெற இருக்கிறது. கோவிட் 19ன் திரிபுநிலை JN.1 ஆகும். இது கோவிட் நோயை உண்டாக்கும் வைரஸாகும்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் JN.1-ன் பரவல் அதிகரித்து வருகின்றன. ஆனால் தற்போதுள்ள தடுப்பூசிகள் தொடர்ந்து பாதுகாப்பை அளிக்கும்’ என்றார்.
COVID-19 விகிதங்கள் எங்கு அதிகரித்து வருகின்றன?
கோவிட் 19ன் JN.1 என்னும் திரிபுநிலை ஜெர்மனியில் அதிகரித்து வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 20 வரை ஜெர்மனியில் 302,100 பேர் JN.1 திரிபுநிலை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் இது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
ஆனால், இது ஜெர்மனி மற்றும் இந்தியாவில் மட்டும் இல்லை என்று செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொது சுகாதார நிபுணர் ஜியாத் அல்-அலி கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நிலைமை மிகவும் கவலைக்குரியதாகி வருகிறது. உலகில் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. சிங்கப்பூரில் கொரோனா எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.
கோவிட்-19 தொற்று விகிதம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது?
பரவலான சோதனை இல்லாததால், கோவிட்-19 இன் உண்மையான தொற்று விகிதங்கள் தெரிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம்.
பெரும்பாலான நாடுகள் 2022-ன் பிற்பகுதியில் கோவிட்-19 சோதனை முடிவுகளை வெளிப்படையாக அறிவிப்பதை நிறுத்தின. எனவே, உலகம் முழுவதும் உள்ள COVID-19-ன் உண்மையான விகிதங்களை அறிவது கடினம்.
COVID-19-ஐ கண்காணிக்கும் ஒரு வழி என்னவென்றால், வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்தும் அவரைப் பரிசோதிப்பதை வைத்தும்தான்.
கோவிட்-19-லிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, தடுப்பூசிகளைப்போடாவிட்டால் தடுப்பூசி போடுவது முதல் விஷயம்.
“மக்கள் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மிக முக்கியம். அடிக்கடி காய்ச்சல், இருமலால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம்,” என பொது சுகாதார நிபுணர் அல்-அலி கூறினார்.
இதுதொடர்பாக தாஸ்குப்தா கூறுகையில், “இந்தியா பூஸ்டர்களை நிறுத்திவிட்டது. உண்மையில், மூன்றாவது பூஸ்டர் டோஸினை போட்டவர்களின் எண்ணிக்கை முதல் இரண்டு டோஸ்களை போட்டவர்களை விட மிகவும் குறைவு” என்றார்.
உலக சுகாதார நிறுவனம், பொது இடங்களில் முகமூடி அணிவதை பரிந்துரைக்கிறது. நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சமூகக் கூட்டங்களைத் தவிர்க்கலாம் எனவும் பரிந்துரைக்கிறது.
தொற்று மற்றும் கடுமையான நோய்களைத் தடுக்க, உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுறுத்தியவை:
- நெரிசலான பகுதிகளில் செல்லும்போது முகமூடியை அணியுங்கள்
- இருமல் மற்றும் தும்மல் வந்தால் கைக்குட்டையினால் மறைத்து செய்யவும்.
- உங்கள் கைகளை ஒவ்வொருமுறையும் தவறாமல் கழுவவும்
- கொரோனா மற்றும் காய்ச்சல் தடுப்பூசிகள் போடாதவர்கள் அதனைப் போட்டுக்கொள்ளுங்கள்.
- உடம்பு சரியில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்.
- அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
கோவிட்-19 சோதனையில் பாஸிட்டிவ் என வந்தால் என்ன செய்வது?
“உங்களுக்கு கொரோனா பாஸிட்டிவ் என வந்தால், உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். மருத்துவரின் ஆன்லைன் ஆலோசனையின்பெயரில், வைரஸ் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள், இதய நோய் உள்ளவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்களையும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லிவிடுங்கள். கிறிஸ்துமஸ் கூட்டங்களில் பங்கெடுப்பதைத் தவிருங்கள். முதலில் பின்பற்றிய அதே நடைமுறைதான்” என்றார்.