மக்களின் கவனம் ஈர்த்த மாட்டுச் செக்கு எண்ணெய்: கரோனா ஊரடங்கில் சாதித்த கோவை பட்டதாரி விவசாயி

கோவை: அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் கரோனா ஊரடங்கு புரட்டிப்போட்டுவிட்டது. வீட்டுக்குள்ளேயே மக்களை சிறைவைத்து, வறுமையைக் கொண்டு கரோனா வதைத்தது.

மத்திய, மாநில அரசுகளின் பல ஊரடங்கு உத்தரவுகளைக் கடந்து, தற்போதுதான் அதன் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்லமெல்ல மீண்டு வருகின்றனர். ஆனால் கரோனா ஊரடங்கிலேயே மாட்டுச் செக்கு எண்ணெயை அறிமுகம் செய்து, தற்போதுவரை சாதித்து வருகிறார் கோவை மருதமலை சாலை கல்வீரம்பாளையத்தில் வசித்துவரும் பட்டதாரி விவசாயி கவுதமன்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளேன். விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனவே, விவசாயமே எனது பிரதான தொழிலாக உள்ளது. பழங்காலத்தில் நம் முன்னோர் மாட்டுச் செக்கால் ஆட்டிய எண்ணெயைத்தான் பயன்படுத்தி வந்தனர். அதன்பின் இயந்திர செக்கு எண்ணெயின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இந்நிலையில்தான் நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி, முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அப்போது ஒருநாள் எனது நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, பயனற்றுக் கிடந்த பழங்கால செக்குக்கல்லை எப்படியாவது பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நினைத்தேன். இந்த செக்குக்கல் 1957-ம் ஆண்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை எண்ணெய் பிழிவதற்காக, என் முன்னோர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, செக்குக்கல்லை எடுத்து சுத்தப்படுத்தினேன். இதில், மாட்டுச் செக்கு எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யலாம் என்ற யோசனை வந்தது. இயந்திர செக்கு எண்ணெய் வகைகளுக்கு மக்கள் வரவேற்பு அளித்த நிலையில், மாட்டுச் செக்கு எண்ணெயையும் மக்கள் கண்டிப்பாக விரும்புவர் என்பது என் நம்பிக்கை.

ஏனெனில் இயந்திரத்தில் தயாரிக்கப்படும் எண்ணெயைவிட, மாட்டுச் செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெய்க்கு தரம், வாசம், அடர்த்தி அதிகம். அதேபோல, எண்ணெய் தயாரிக்கும்போது சூடாகாது என்பதால் நல்ல நுண்ணுயிரிகள் அழியாது.

மாட்டுச்செக்கில் தயாரித்த எண்ணெயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உடல்சோர்வு, உடல்வலி, மூட்டுவலி நீங்க வாய்ப்புள்ளது. எளிதில் செரிமானம் ஆகும். தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்தால் உடல் குளிர்ச்சியடையும், தலைமுடி கருமையாக வளரும். தோல் பளபளப்பாக இருக்கும்.

இதையெல்லாம் விசாரித்து அறிந்தபிறகு, இத்தொழிலில் முழுமையாக ஈடுபட தொடங்கினேன். என் மனைவியின் பணிநிமித்தமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, கோவைக்கு வரநேர்ந்தது. இங்கு வந்ததும், 2-வது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கல்வீரம்பாளையத்தில் தங்கியிருந்து, எனது தந்தையின் நினைவாக மணி மாட்டுச்செக்கு எண்ணெய் என்ற பெயரில் இத்தொழிலை தொடர்ந்து வருகிறேன். இதற்காக வாடகைக்கு நிலம் பிடித்து, களம் தயார்படுத்தினேன்.

மூலிகைத்தன்மை கொண்ட கல்வாகை என்ற மரத்தைத்தான் எண்ணெய் பிழிய பயன்படுத்துகிறேன். எண்ணெயை நன்றாக பிரித்து கொடுக்கவும், எள், தேங்காய், கடலையில் உள்ள சத்துகள் குறையாமல் பாதுகாக்கவும் கல்வாகை மரம் பயன்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *