இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்யும் கார்களில் நான்கில் ஒன்று கிரெட்டா!
கிரெட்டா (Creta) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஹூண்டாய் நிறுவனம். இந்த காரின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உள்ளது. அறிமுகமான உடனேயே 25,000 பேர் கிரெட்டா ஃபேஸ்லிஃப்டை முன்பதிவு செய்துள்ளனர். இதில் 55 சதவீகிதத்தினர் பெட்ரோல் காரையும், 45 சதவிகிதத்தினர் டீசல் காரையும் தேர்வு செய்துள்ளனர்.
மேலும் முன்பதிவு செய்துள்ளவர்களில் 40 சதவீகிதத்தினர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் மாடலை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களில் 60 சதவீதம் SUV கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் இதை 65 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது ஹூண்டாய் நிறுவனம். ஜூலை 2015 ஆம் ஆண்டு அறிமுகமான கிரெட்டா கார் கூடிய விரைவில் ஒரு மில்லியன் விற்பனை என்ற மைல்கல்லை எட்டவுள்ளது. கிரெட்டா காருக்கு கிடைத்த வரவேற்பு புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது ஹூண்டாய்.
2023 ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களில், 26 சதவீதம் கிரெட்டா கார்களாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் கிரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த வருடம் விற்பனையான ஹூண்டாய் கார்களில் நான்கில் ஒன்றாக கிரெட்டா இருந்துள்ளது. தற்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு கிரெட்டா காருக்கு புதிய தோற்றத்தை அளித்துள்ளோம்.
இன்று உள்ள வாடிக்கையாளர்கள் ஆர்வமிக்கவர்களகவும், இளைய வயதினராகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்றவர்களை கவரும் வகையில் கார்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களை தக்கவைக்க வேண்டுமென்றால் சரியான சமயத்தில் கார்களின் மாடல்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என ஹூண்டாய் இந்திய நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தருன் கார்க் கூறுகிறார்.
முதல் தலைமுறை கிரெட்டா கார் அறிமுகமான ஆறு மாதங்களிலேயே 40,000 விற்பனையை எட்டியது. சரியாக ஆகஸ்ட் 2016 அன்று 1,00,000 என்ற மைல்கல்லை எட்டியது. 2020-ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை கிரெட்டா அறிமுகமானதை அடுத்து ஏப்ரல் 2021-ம் ஆண்டு 6,00,000 என்ற விற்பனை மைல்கல்லை எட்டியது.
2023-ம் ஆண்டு விற்பனையான கிரெட்டா கார்களில் 60 சதவிகிதம் பெட்ரோல் மாடலாகும். தற்போது புதிய கிரெட்டா காரில் மறுபடியும் டர்போ பெட்ரோல் இஞ்சின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் போட்டியாளர்களான டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி போன்றவை தங்களது HYRYDER மற்றும் GRAND VITARA கார்களில் ஹைபிரிட் பவர் ட்ரைய்ன் பயன்படுத்தி வரும் நிலையில், அரசின் வழிகாட்டுதல், வரி ஒழுங்குமுறை மற்றும் உள்ளூர் சந்தை நிலவரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே எங்களது தயாரிப்பு திட்டங்கள் வகுக்கப்படும் என ஹூண்டாய் தரப்பில் கூறப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஹைபிரிட் கார்களுக்கு 43 சதவிகிதம் விதிக்கப்படுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விட ஹைபிரிட் கார்களுக்கே வரவேற்பு அதிகமுள்ளது. அதனால்தான் உள்ளூரிலேயே பேட்டரி தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். இதனால் எதிர்காலத்தில் எங்களால் அதிகமான எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த முடியும் என கார்க் கூறுகிறார்.