Crime: சென்னையில் பயங்கரம்..! வேறொருவருடன் பைக்கில் சென்ற மனைவி.. நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய கணவன்
சென்னையில் வேறொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக கணவனால், சரமாரியாக வெட்டப்பட்ட மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்:
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலை அருகே, இருவர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அந்த ஆண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன்னிடம் பேசிக்கொண்டிருந்த பெண்ணை கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியுள்ளார். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிந்து வாழ்ந்த கணவன் – மனைவி:
முதற்கட்ட தகவல்களின்படி, கைது செய்யப்பட்டுள்ள 35 வயதான ரஹமதுல்லா என்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஆவார். சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்த இவர், அதே பகுதியில் உள்ள காலணி தைக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சனாப் என்ற பெண்ணை காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 8 மாதங்களாக சனாப், கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கணவருக்கு வந்த சந்தேகம்:
பிரிந்து வாழ்ந்து வந்தாலுமே பிரச்னையை தீர்ப்பது தொடர்பாக கணவன்-மனைவி இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக கணவரிடம் பேச சனாப் மறுத்து வந்தார். மனைவியின் செயல்பாடுகள் மீது சந்தேகம் அடைந்த ரஹமத்துல்லா, சனாபிற்கு தெரியாமலேயே அவரை பின்தொடர ஆரம்பித்தார். அப்போது மனைவிக்கு வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை கண்டறிந்துள்ளார். அதே நபருடன் தனது மனைவி மோட்டார் சைக்கிளில் நெருக்கமாக அமர்ந்து செல்வதை கண்டு ரஹமத்துல்லா அதிர்ச்சி அடைந்தார்.
25 இடங்களில் வெட்டுக்காயம்:
இதுதொடர்பாக பேசுவதற்காக மனைவி வேலை செய்யும் ஆலைக்கே ரஹமதுல்லா சென்றுள்ளார். அப்போது, “நான் ஊருக்கு செல்கிறேன். திரும்ப வருவதும், வராததும் உன் கையில் இருக்கிறது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதற்கு “நீ வரவேண்டாம். ஊரிலேயே தங்கி விடு” என்று சனாப், கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ரஹமத்துல்லா, இடுப்பில் மறைத்து வைத்து இருந்த இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். தப்பிக்க முயன்றபோதும் சனாபை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ரஹமதுல்லா சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சனாப்பின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், உடலில் 25 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஹமத்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.