திரண்ட திரையுலகம்… இன்று சொந்த ஊரில் பவதாரிணி உடலுக்கு இறுதிச் சடங்குகள்!
இன்று சொந்த ஊரான தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பவதாரிணி உடலுக்கு இறுதிசடங்குகள் நடைப்பெற உள்ளது. முன்னதாக நேற்றிரவு 10 மணிக்கு மேல், பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர், சென்னையில் இருந்து தேனி கொண்டு செல்லப்பட்டது.
பிரபல பிண்ணனி பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 47. இந்நிலையில் இலங்கையில் இருந்து அவரது உடல் விமானத்தில் கார்கோ மூலம் நேற்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. பவதாரிணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு சென்று பெற்றுக் கொண்டனர்.
அங்கிருந்து , தி நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்றிரவு 10 மணி வரை சென்னையில் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர், பாடகி பவதாரணியின் உடல் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உறவினர்கள், பண்ணைபுரம் மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.