கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே கிடையாது… அதை நாணயமாக ஏற்க முடியாது: ரிசர்வ் வங்கி

கிரிப்டோ கரன்சியை நாணயங்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் கிரிப்டோ கரன்சிகளுக்கு அடிப்படை மதிப்பு இல்லை என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிட்காயின்கள் போன்ற கிரிப்டோ கரன்சிகள் நிதி அமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிர்வாக இயக்குனர் பி. வாசுதேவன் கோழிக்கோடு ஐஐஎம் நிறுவனத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கிரிப்டோ கரன்சிகளை கரன்சிகள் என்று அழைக்க முடியாது, ஏனெனில் அவை எந்த அடிப்படை மதிப்பையும் கொண்டிருக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இறுதியில், கிரிப்டோ கரன்சியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது, பிட்காயின்களுக்கு இந்தியாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை எனவும் முதலீட்டாளர்கள் அவற்றை வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிரான நடவடிக்கை மற்றும் சில சர்வதேச நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய வாசுதேவன், சுய கட்டுப்பாடு தான் நிதி தொழில்நுட்பத் துறையை சிறப்பாகப் பாதுகாக்கும் வழி என்று குறிப்பிட்டார்.

கிரிப்டோகரன்ஸிகளின் நிதி நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உலகளாவிய நிதி நெருக்கடியைத் தூண்டுக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

கடந்த மாதம் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ் கிரிப்டோ கரன்சிக்கு எதிரான கணிப்புகளைக் கூறினார். இந்தியாவில் உள்ள கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை தெரிவித்த சக்திகாந்த தாஸ், கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அபாயங்கள் இல்லாமல் இல்லை என்று அவர் கூறினார். நிலையற்ற தன்மை, பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற அபாயங்கள் கிரிப்டோகரன்சியில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *