சிஎஸ்கே ரசிகர்கள் செம குஷி.. அம்பதி ராயுடு இடத்தில் ஆடப் போவது இந்த வீரர் தான்.. மைக் ஹஸ்ஸி அப்டேட்
2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு இடத்தில் பேட்டிங் செய்யப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
சிஎஸ்கே அணியில் கடந்த ஆறு வருடங்களாக இடம் பெற்று வந்த அம்பதி ராயுடு நான்காவது அல்லது ஐந்தாவது வரிசையில் பேட்டிங் இறங்கி வந்தார். பல போட்டிகளை அவரது பேட்டிங்கால் வென்று கொடுத்து இருக்கிறார். 2023 ஐபிஎல் தொடருடன் அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் அவரது இடத்தில் பேட்டிங் செய்ய அவரைப் போன்ற சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஒரு அதிரடி வீரரை சிஎஸ்கே அணி தேடி வந்தது. 2024 ஐபிஎல் தொடரில் சில மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே நிர்வாகம் வாங்கி இருந்தது. அதில் ஒருவர் தான் சமீர் ரிஸ்வி. அவரை 8.40 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியதை பலரும் வியப்புடன் பார்த்தார்கள். தற்போது அத்தனை விலை கொடுக்க என்ன காரணம் என தெரிய வந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி அளித்த பேட்டி ஒன்றில், அம்பதி ராயுடு இடத்தில் சமீர் ரிஸ்வி பேட்டிங் ஆட இருக்கிறார் என்றார். அம்பதி ராயுடு அனுபவ வீரர். அவரைப் போல சமீர் ஆடுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவரிடம் நல்ல திறமை உள்ளது என்றார் ஹஸ்ஸி.
சமீர் ரிஸ்வி உபி டி20 எனும் உத்தரபிரதேச மாநில டி20 தொடரில் அபார ஆட்டம் ஆடி அனைத்து ஐபிஎல் அணிகளையும் ஈர்த்து இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற உபி டி20 தொடரில் 10 போட்டிகளில் 50 பேட்டிங் சராசரியுடன் 455 ரன்கள் குவித்து இருந்தார் சமீர் ரிஸ்வி.
சமீர் ரிஸ்வி குறித்து மைக் ஹஸ்ஸி பேசுகையில், “நிச்சயமாக. அவரால் கண்டிப்பாக அந்த இடத்தில் பேட்டிங் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அதாவது அம்பதி ராயுடு அதிக அனுபவம் உள்ளவர், அவர் நீண்ட காலம் விளையாடியவர். அவர் ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர், அதேசமயம் ரிஸ்வி தனது ஐபிஎல் வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறார்,” என்று கூறினார்.
மேலும், “ராயுடு இத்தனை ஆண்டுகளாக செய்து வந்ததை ரிஸ்வி சரியாகச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நிச்சயமாக, நாம் அவரை வளர்க்கத் தொடங்கலாம், மேலும் அவருக்கு நிறைய இயல்பான திறன் உள்ளது. எனவே, அவருடன் சேர்ந்து செயல்பட உற்சாகமாக இருக்கிறது. அவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது,” என்று ஹஸ்ஸி கூறினார்.
“அவர் மிடில் ஆர்டரில் எங்காவது பேட் செய்வார் என்று நினைக்கிறேன். அவர் வெளிப்படையாக பந்தை அடித்து ஆடக் கூடியவர். நேற்றுதான் அவரை முதல்முறையாகப் பார்த்தேன். அவர் மிகவும் திறமையான இளம் வீரராக தெரிகிறார். எனவே, அவருடன் தனிப்பட்ட முறையில் பணியாற்றவும், அவரது ஆட்டத்தை மேம்படுத்த உதவவும் நான் எதிர்நோக்குகிறேன், வெளிப்படையாக இந்தப் ஐபிஎல் தொடருக்காக மட்டுமின்றி, அடுத்து வரும் ஆண்டுகளிலும் அவரை மேம்படுத்த இருக்கிறேன். இந்த ஐபிஎல்லில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவரது கேரியரில் இன்னும் பல வருடங்கள் உள்ளன,” என்று ஹஸ்ஸி கூறினார்.