சிஎஸ்கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம்..! ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில் சிக்கல்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து நட்சத்திர அணியான ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் ஓராண்டுக்கு பின் தோனியை மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் காண ஆர்வமாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் விண்டேஜ் ஹேர்ஸ்டைலில் தோனி களமிறங்கவுள்ளதால், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார். மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சென்னையிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.