சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன்.. தோனியின் முடிவு.. அம்பதி ராயுடு ஓபன் டாக்

2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என கூறப்படும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த கேப்டனை தோனி எப்படி தேர்வு செய்வார் என்பது குறித்து முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் அம்பத்தி ராயுடு பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் தோனி இம்பாக்ட் வீரராக இருந்து கொண்டு, பாதி போட்டியில் வேறு ஒருவரை கேப்டனாக செயல்பட வைப்பார். அதன் மூலம் அடுத்த கேப்டனை தோனி வளர்ப்பார் என அம்பத்தி ராயுடு கூறி இருக்கிறார். ஆனால், தோனி இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆட முடிவு செய்தால் அவரே இந்த ஆண்டு முழுவதும் கேப்டனாக நீடிப்பார் என்றார்.
ரசிகர்கள் பலர் தோனி பேட்டிங் ஆர்டரில் ஐந்தாம் வரிசைக்கு மேலே வந்து ஆட வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அம்பத்தி ராயுடு அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார். தோனி ஏழாம் வரிசையில் பேட்டிங் ஆடாமல் சற்று மேலே சென்று ஐந்தாம் வரிசை, ஆறாம் வரிசையில் பேட்டிங் ஆட வாய்ப்பு உண்டு. ஆனால், அவர் எப்போதும் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யவே மாட்டார் என்றார் அம்பத்தி ராயுடு.
இது பற்றி அம்பத்தி ராயுடு பேசுகையில், “இம்பாக்ட் பிளேயர் விதியின்படி, தோனி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு வேறு ஒருவரை நடுவில் சில ஓவர்களில் கேப்டனாக உயர்த்த முடியும். எனவே இந்த ஆண்டு சிஎஸ்கே-வுக்கு ஒரு மாற்றமான ஆண்டாக இருக்கலாம். இது அவரது கடைசி ஆண்டாக இருந்தால் இதை செய்வார். இன்னும் சில வருடங்கள் விளையாட முடிவு செய்தால், அவரே கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரை கேப்டனாக பார்க்க விரும்புகிறேன்” என்றார்.
“அவர் இந்த சீசனில் விளையாட முடிவு செய்திருந்தால், அவர் 10 சதவீதம் கூட உடற்தகுதியுடன் இருந்தால் கூட அவர் நிச்சயமாக முழு சீசனிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். காயம் அவரை போட்டிகளில் இருந்து விலக்கி வைக்காது. மேலும் அவர் இதற்கு முன்பும் பல காயங்களுடன் விளையாடி இருக்கிறார். கடந்த சீசனில், அவர் மிகவும் மோசமான முழங்கால் காயத்துடன் விளையாடினார். எனவே, அவர் முழு சீசனில் விளையாடுவதை எதுவும் தடுக்காது என்று நான் நினைக்கிறேன்.” என்றார் அம்பத்தி ராயுடு.