தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு – அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த பெட்டிஷனர்!
இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. தொழில் கூட்டாளிகளான ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோருடன் இணைந்து தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி தோனியின் பெயரில் கிரிக்கெட் அகாடமி திறக்கப்பட்டது.
இதில் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனை மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகிய இருவரும் பின்பற்றவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் விதிமீறல் இருப்பதாக கூறி திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தனது பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்படும் ஒப்பந்தத்திலிருந்து தான் பின் வாங்கிய நிலையிலும் கூட தனது பெயரில் தொடர்ந்து கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் ரூ.15 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 6ஆம் தேதி தோனியின் வழக்கறிஞர் அந்த 2 பேர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் தான் திவாகர் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், இதனால் தோனி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தோனிக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலில் இதனை தோனியிடம் தெரியப்படுத்துங்கள் என்று நீதிமன்ற சார் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரரான திவாகர் தோனி மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதில், தோனி தரப்பினர் தங்களது மீது பொய்யான புகார்களை கூறி வருவதாகவும், தங்களைப் பற்றி பேசக் கூடாது என்று தோனிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
மேலும், ஏற்கனவே எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பானச் செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளன. அதனை நீக்க கூகுள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.