ஆபத்தான முன்னுதாரணம்… நயன்தாரா படத்துக்கு ஆதரவாக நடிகை பார்வதி ஆவேசம்!
நயன்தாரா, ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கியதற்கு நடிகை பார்வதி தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
அன்னபூரணி படத்தில் அசைவம் சமைக்கும் அக்ரகாரத்துப் பெண்ணாக நயன்தாரா நடித்திருந்தார். இதில் முஸ்லீமாக நடித்திருந்த ஜெய், வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டி, ராமரும் அசைவம் சாப்பிட்டுள்ளார் என நயன்தாராவிடம் கூறும் காட்சி வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிவசேனா முன்னாள் நிர்வாகி ரமேஷ் சோலங்கி மும்பை காவல்நிலையத்தில் நயன்தாரா, ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார்.
மேலும் அன்னபூரணி படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மும்பை நெட்பிளிக்ஸ் அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஸீ ஸ்டுடியோஸ், ‘யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை, அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்’ என விஸ்வ இந்து பரிஷத்துக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில், இந்தச் சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், மலையாள நடிகை பார்வதி அன்னபூரணி படத்துக்கு ஆதரவாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தணிக்கைச் சான்று பெற்ற ஒரு திரைப்படத்தை தங்களது உணர்வு புண்பட்டது என்று ஒரு அமைப்போ, அரசியல் கட்சியோ, மத நிறுவனமோ முடக்குவது திரைத்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.