Dayanidhi Maran: ’இந்தி படிப்பவர்கள் கக்கூஸ் கழுவுகிறார்கள்!’ தயாநிதி பேச்சால் வெடித்தது சர்ச்சை!
சனாதனம் குறித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசிய கருத்து மீண்டும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
உ.பி மற்றும் பீகாரில் இந்தி மட்டும் படிப்பவர்கள்தான், இங்கு வந்து தமிழை கற்றுக் கொண்டு நமக்கு வீடுகட்டி தரான், சாலையை பெருக்குறான், கக்கூஸ் கழுவுறான். இதுதான் இந்தி படிப்பவர்களின் நிலை என தயாநிதி மாறன் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தயாநிதி மாறனின் வீடியோவைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, வட இந்திய மாநிலங்கள் குறித்து திமுக எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் ஆட்சேபகரமான கருத்தைத் தெரிவித்த பிறகும், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் (அவர் முதல்வராக இல்லாதபோது) பீகார் டி.என்.ஏவை விட தெலுங்கானா டி.என்.ஏ சிறந்தது என்று கூறிய பிறகும், திமுக தலைவர் தயாநிதி மாறன் மீண்டும் வடக்கு-தெற்கு விவாதத்தைத் தூண்ட முயல்கிறார் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. இந்தி பேசும் மக்கள் குறித்த தங்கள் கூட்டணிக் கட்சியின் கருத்தை நிதிஷ் குமாரும், லாலு யாதவும் ஏற்றுக் கொள்கிறார்களா? இந்தி பேசும் மக்கள் மீது திமுக மற்றும் இந்தியா பிளாக் ஏன் இவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று பீகார் பாஜக எம்பி கிரிராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.
இந்தி குறித்து தயாநிதி மாறன் கூறிய கருத்து ஆங்கிலம் கற்பவர்கள் மற்றும் இந்தி மட்டுமே கற்பவர்களை ஒப்பீடு செய்து தயாநிதி மாறன் பேசி உள்ளார். ஆங்கிலம் கற்றவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் நல்ல வேலை கிடைக்கிறது, ஆனால் இந்தி மட்டுமே கற்றவர்கள் – உ.பி மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் – சாலைகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள் என தயாநிதி மாறன் கூறி உள்ளார்.
தயாநிதி மாறனின் இந்த கருத்துக்கு ந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசி உள்ள அவர், திமுக எம்.பி தயாநிதிமாறன் சாதிக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தால், சில சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதுபோன்ற அபாயகரமான பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தால், அது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.
ஆனால் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் இழிவாக பேசுவது கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் கண்டிக்கிறோம். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வருபவர்களிடம் மக்கள் மரியாதையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சமூகநீதி என்ற லட்சியத்தை பகிர்ந்து கொள்ளும் கட்சியாக திமுகவை பார்க்கிறோம். இலட்சியத்திற்கு எதிரான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.