போரில் கழியும் நாள்கள்: காஸாவின் துயரம்!
இஸ்ரேல்- ஹமாஸ் போர் 13-வது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில் காஸாவில் இடம்பெயர்ந்த மக்கள் நாள்தோறும் குடிநீர், உணவு மற்றும் கழிப்பிட வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பெற போராட வேண்டியுள்ளது.
அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் அங்குள்ள மக்களிடம் பேசி எடுத்த நேர்காணலில் அபு ஜராத் மற்றும் அவரது குடும்பத்தின் ஒருநாள் எப்படி இருக்கிறது என்பது குறித்து தெரிய வருகிறது.
போருக்கு முன்பு மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் வசித்த அபு ஜராத்தின் குடும்பத்தில் 10 பேர் உள்ளனர். குப்பைகள் தேங்கும் சேற்று மண்ணுக்கு இடையில் உள்ள மிகக் குறுகிய அளவிலான முகாமில் 10 பேரும் தங்கியுள்ளனர்.
விறகு சேகரிப்பதில் இருந்து சமைப்பதற்கான பொருள்கள், காய்கறிகள் வாங்குவது வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை மேற்கொள்கின்றனர்.
இரவுகளில் நாய்கள் தங்கள் கூடாரத்தைச் சுற்றி வருவதாகவும் தாங்கள் நாய்கள் போல வாழ்வதாகவும் ஜராத்தின் மனைவி தெரிவித்துள்ளார்.
அருகில் கிடைக்கிற நீரை பாத்திரம் கழுவ மட்டுமே உபயோகிக்க முடியும். குடிநீருக்கு நீண்ட வரிசையில் நின்று வாங்கி வர வேண்டியுள்ளது.
காஸாவில் போருக்குப் பிறகான பொருளாதார நிலை, அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதற்கும் அதிகமாகச் செலவழிக்க வேண்டியுள்ளது.
ஐநாவின் இலவச வாழ்வாதார பொருள்கள் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. அந்தப் பட்டியலில் தங்கள் பெயரை இணைப்பதிலும் சிக்கல் இருப்பதாக காஸா மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல இடங்களில் வாழ்வாதார பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள மக்களால் எடுத்து கொள்ளப்படுகிறது. அந்த டிரக்கைப் பாதுகாக்க வரும் ஹமாஸ் படையினர் மக்களை விலக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 வயது சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது.
போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 22,400 என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் பசி, தாகம் மற்றும் பரவுகிற தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் எனக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.