நெருக்கமானவரின் மறைவு… ராமேசுவரத்தில் மோட்ச விளக்கு ஏற்றிய வடிவேலு – விஜய்யின் அரசியல் பற்றி சொன்ன நச் பதில்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாமன்னன் திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தி இருந்தார். மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படி பிசியான நடிகராக வலம் வரும் வடிவேலு, நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார். வடிவேலுவின் தாயார் கடந்த ஆண்டு காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதையொட்டி அவருக்காக ராமேஸ்வரம் கோவில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டதாக வடிவேலு கூறினார்.
கோவிலில் வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவ்வளவுதான் என நக்கலாக பதிலளித்துவிட்டு கிளம்பிய வடிவேலுவை மடக்கிப் பிடித்த செய்தியாளர்கள் மீண்டும் அதுகுறித்த கேள்வியை வடிவேலுவிடம் முன்வைத்தனர்.
அப்போது அவர் கூறியதாவது : “மக்களுக்கு நல்லது செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஏன் நீங்கள் கூட வரலாம். யாரும் அரசியலுக்கு வர கூடாது என சொல்ல முடியாது. டி ராஜேந்தர், ராமராஜன், பாக்கியராஜ் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். எல்லோரும் நல்லது செய்யத்தானே வந்தார்கள் என பதிலளித்தார்.