டிசம்பர் மாதத்தின் ரோஜாவின் ராஜா சிவாஜி கணேசன்
டிசம்பர் மாதம் தமிழ் சினிமாவுக்கு மந்தமான மாதம். நவம்பரில் தீபாவளியையொட்டி பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி, டிசம்பரில் திரையரங்குகள் ஆயாசத்தில் இருக்கும். கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறவர்கள் தமிழகத்தில் சிறுபான்மையினர் என்பதால் பெரிய படங்கள் கிறிஸ்துமஸையொட்டி வெளியாவதில்லை. அதைவிட பெரிய பண்டிகையான பொங்கல் அடுத்த மாதமே வருவதும் ஒரு காரணம்.
விதிவிலக்காக சிவாஜியின் படங்கள் தொடர்ந்து டிசம்பர் மாதம் வெளியாகி வந்திருக்கின்றன. கலெக்ன் தரக்கூடிய கதையா, காதல், நகைச்சுவை, சண்டை, சென்டிமெண்ட் அனைத்தும் கலந்த கதையா என்று அவர் பார்ப்பதில்லை. சண்டையில்லை சென்டிமெண்ட் மட்டும்தான் என்றாலும் நடிப்பார். காதல் இல்லை சோகம்தான் என்றாலும் நடிப்பார். படத்தில் அவரது கதாபாத்திரம் பிடித்திருந்தால் போதும். அதனால், நடிக்கத் தொடங்கியது முதல் வருடம்தோறும் குறைந்தது ஆறேழு படங்களாவது அவரது நடிப்பில் வெளிவந்துவிடும். அதில் டிசம்பர் மாதமும் சில நேரம் திருவிழா காணும். அவர் நடித்த காலத்தில் டிசம்பர் மாததத்தை ரோஜா என்று கொண்டால் அதன் ராஜா சிவாஜி கணேசன்தான். ரோஜாவின் ராஜா என்ற பெயரிலேயே 1976 டிசம்பரில் சிவாஜி நடிப்பில் ஒரு படம் வெளியானது.
பெயரில் ரொமான்டிசத்தைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் கதையும் அதன்படியே இருக்கும். ராஜா ஏழை கல்லூரி மாணவன். அவனது பணக்கார நண்பன் கோபால். ராஜாவுக்காக எதையும் செய்பவன். இருவரும் ஒரேபோல்தான் உடையணிந்து, உணவருந்துவார்கள். அந்தளவு நெருக்கம். கல்லூரிக்குப் புதிதாக வரும் ஜானகி, கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில், ராஜா பாடுவதைக் கேட்டு அவனிடம் காதல் கொள்வாள். இதற்கு முன்பே இருவருக்கும் பழக்கம் இருந்தாலும் இந்த நிகழ்வு அவன் மீது காதல் கொள்ள வைக்கும். இருவரும் காதலிப்பார்கள். ஜானகி கோபாலைப் போல பணக்கார வீட்டுப் பெண்.
நண்பர்குழாமில் இருக்கும் தியாகு செய்யும் வேலையால் பிரச்சனைகள் உருவாகும். ஜானகியின் தந்தை ஏழையான ராஜாவை ஏற்க மறுத்து, கோபாலுக்கு அவளை திருமணம் பேசி முடிப்பார். நண்பனுக்கு நிச்சயமான பெண்ணை, தன்னுடைய காதலி என்று எப்படி உhpமைக் கொண்டாடுவது என ராஜா விலகி நிற்பான். இதனிடையில், கடத்தல்காரன் சிங்கப்பூர் ராசையாவுடன் ஏற்படும் மோதலில் ராஜாவின் நினைவு தவறிவிடும். அது திரும்புபோது கோபாலும், ஜானகியும் கணவன், மனைவியாக அவன் முன் நின்று கொண்டிருப்பார்கள். பாதிக்கப்பட்ட ராசையா ராஜாவுடன் மறுபடியும் மோத, அங்குவரும் கோபாலையும், ஜானகியையும் பார்க்கப் பிடிக்காமல் ராஜா தற்கொலை செய்யப் போவான். அப்போது ஜானகி, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை, இப்போதும் சிங்கிள்தான் என்று சொல்ல, இருவரும் இணைவார்கள். இத்தனை குழப்பத்திற்கும் காரணமான தியாகுவே ஜானகி யார் என்ற உண்மையைச் சொல்ல, கோபால் திருமணத்தை நிறுத்தி, ஜானகியை ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க அவளது தந்தையையும் சம்மதிக்க வைத்திருப்பான்.
இதில் ராஜா, ஜானகியாக சிவாஜி, வாணி ஸ்ரீயும், கோபால், தியாகுவாக ஏவிஎம் ராஜனும், ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர். படத்தின் ஆரம்பத்தில் வரும் கல்லூரி மற்றும் காதல் காட்சிகளை கலகலப்பாக எடுத்திருந்தனர். சோ ராமசாமி கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும், அவரது தந்தை மற்றும் தாயாகவும் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். வி.கே.ராமசாமியின் மகள் மனோரமாவை சோ மணமுடிப்பார். சுவிட்ச் போட்டா லைட் எரியும். ஆனா, லைட்ட போட்டா சுவிட்ச் எரியாது, இதை நீ மறக்கவே கூடாது என்று மாமியார் சோ, மருமகள் மனோரமாவுக்கு அட்வைஸ் செய்யும் காட்சிகள் கலகலப்புரகம்.
ஆரம்பத்தில் கலகலப்பாக செல்லும் படம், சிவாஜிக்கு நினைவு பறிபோவது, வாணி ஸ்ரீ பாட்டுப் பாடியதும் நினைவு திரும்ப வருவது என கொஞ்சம் டல்லடித்தாலும் இப்போதும் போரடிக்காமல் ரோஜாவின் ராஜாவை ரசிக்கலாம்.
இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். ஆனால், இணையத்திலும், யூடியூபில் உள்ள படப்பிரதியிலும் பாடல்கள் புரட்சிதாசன் என்றுள்ளது. யூடியூபில் உள்ள ரோஜாவின் ராஜா படப்பிரதியில், படத்தின் டைட்டிலில் ஒரிஜினல் டைட்டிலை வைக்காமல் சிவாஜியின் தராசு படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இந்த போர்ஜரி போங்கு எதற்காக என்று தெரியவில்லை. சிவாஜியின் பீல்குட் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு ரோஜாவின் ராஜா நல்ல தேர்வு.