புயல் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை! 8ம் தேதி கூட்டணிக் கட்சிகளை சப்போர்ட்டுக்கு அழைக்கும் TR.பாலு!
பிப்ரவரி 8ம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர்வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு புறக்கணிப்பு; சென்ற 1.2.2024 அன்று, வரும் நிதியாண்டு 2024-25 க்கான இந்திய ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதில் , அன்மையில்2023 டிசம்பர் மாதத்தில் தமிழ் நாட்டைப் புரட்டிப் போட்ட வரலாறு காணாத புயல் மழை வெள்ள சேதங்களை சரிசெய்யவும் நிவாரண உதவியாக வும் 37000 கோடி ரூபாய் தந்து உதவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. அதைப் போல, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உரிய நிதி ஓதுக்கீடு குறித்தும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடு திரட்டும் நோக்கில் ஸ்பெயின் நாட்டில் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வன்மையாக கண்டித்ததுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்துவர் என்றும் அறிவித்தார். அதன்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
முன்னதாக கடந்த 31.1.2024 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று (2.2.2024) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திமுக சார்பில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி. ஆர்.பாலு மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து தனது கடும் கண்டனங்களை வெளியிட்டார்.
அதில், குடியரசுத் தலைவர் தனது உரையில் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தான் எடுத்துக் கூறி உள்ளார். தனது சொந்த கருத்துக்கள் எதையும் சொல்ல வில்லை. அவரது உரை அரசு தயாரித்த உரை. அதனை குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் அச்சு பிறழாமல் கடைசி வார்த்தை வரை அப்படியே பேசி உள்ளார். அதுதான் மரபு. அதற்காக திருமதி முர்மு அவர்களுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அதற்காக அவரது உரையில் பிரதிபலிக்கப் பட்டுள்ள, திமுக வின் கொள்கை கோட்பாடுகட்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தையும் திமுக ஏற்பதாக பொருள் அல்ல.
குடியரசுத் தலைவரைப் போல் அல்லாமல் பல ஆளுநர்கள் குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசு கொடுத்த உரையில் இல்லாத விஷயங்களைப் பேசினார். சில ஆளுநர்கள் மாநில அரசு தங்கள் அரசு என்பதை மறந்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் போட்டி போடும் வகையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். பிரிட்டிஷ் கால ஆளுநர்கள் போல தாங்கள் தான் அனைத்தம் அறிந்தவர்கள் என்ற போக்கில் செயல் படுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கோடிக் கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்காமல் மக்கள் தீர்ட்பை காலடியில் போட்டு மிதிக்கும் விதத்தில் செயல் படுகிறகர்கள். அத்தகைய ஆளுநர்களை கண்டித்து அவர்களை அரசியலமைப்புச் சட்டத்தின படி பணியற்ற வைக்க குடியரசுத் தலைவர் முன்வர வேண்டு்ம் என்று நேற்று (2.2.2024) பாராளுமன்றத்தில் பேசியது நினைவுகூரத்தக்கது.