விரைவில் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை கொடுக்க முடிவு..?
இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை விடப்படும். ஆனால் அவர்கள் வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. மேலும் வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கின்றன.
இதனை அவர் பரிசீலனை செய்து முடிவு எடுத்து, இந்திய வங்கிகள் சங்கத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய நிதியமைச்சர் வாரத்திற்கு ஐந்து வேலை நாட்களை பரிசீலனை செய்து, தகுந்த முடிவை எடுப்பதோடு மட்டுமல்லாமல், சாதகமான முடிவையும் எடுத்து இந்திய வங்கிகள் சங்கத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ரிசர்வ் வங்கி மற்றும் எல்ஐசியில் வாரத்திற்கு ஐந்து வேலை நாட்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது குறித்து மத்திய அரசு விரைவில் சாதகமான முடிவை எடுக்கும் என்று தெரிகிறது. மேலும், பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்த இந்திய வங்கிகள் சங்கம் கடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 17 சதவீத ஊதிய உயர்வு மூலம் கூடுதலாக 12,449 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உறுதிசெய்ய முடியும்.