டீப்ஃபேக் கால் நானும் பாதிக்கப்பட்டேன்: சன்னி லியோன்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப்ஃபேக் மூலம் போலியான முறையில் பிரபலங்களின் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கேத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் உட்பட சில நடிகைகளின் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்தன. இந்நிலையில் தானும் டீப்ஃபேக் தொழில் நுட்பத்தால் பாதிக்கப்பட்டதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘பலர் நினைப்பது போல இது சமீபத்திய பிரச்சினை இல்லை. நீண்ட காலமாக நடந்து வரும் அச்சுறுத்தல். இது போன்று எனக்கும் நடந்தது. ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. இது என்னை உளவியல் ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் இதனால் பிரச்சினைகளைச் சந்திக்கும் இளம் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஏதாவது நடந்தால் சைபர் கிரைமில் புகார் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.