போட்டியிட்ட 6 முறையும் தோல்வி; 7வது முறையாவது கைகொடுக்குமா தென்காசி? எதிர்பார்ப்பில் கிருஷ்ணசாமி

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுவை உட்பட தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாதிய வன்முறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாதாடினார். இதே போன்று 1999ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.

அப்போது காவல் துறையினர் நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுக்க வந்தவராக கிருஷ்ணசாமி பார்க்கப்பட்டார். இதனை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இருந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1998ம் ஆண்டு முதல் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 6 முறையும் தோல்வியையே தழுவி வந்துள்ளார். அதன்படி 1998ம் ஆண்டு 19.15% வாக்குகளும், 1999ம் ஆண்டு 27.93% வாக்குகளும், 2004 தேர்தலில் 14.20% வாக்குகளும், 2009 தேர்தலில் 15.69% வாக்குகளும், 2014 தேர்தலில் 26.19% வாக்குகளும், கடைசியாக 2019 தேர்தலில் அதிகபட்சமாக 33.67% வாக்குகளும் பெற்றுள்ளார். தொடர்ந்து வாக்கு சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், இந்து முறை அதிமுக ஆதரவோடு நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் 7வது முறையாக களம் இறங்கி உள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *