சுவை மிகுந்த காரமான கொத்தமல்லி சட்னி… ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.!
பெரும்பாலும் கொத்தமல்லி இலைகளை குறிப்பிட்ட சில உணவுகளில் சேர்ப்பதால் அந்த உணவின் சுவையே கூடிவிடும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இலையை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கொத்தமல்லியின் அதிகபட்ச பலன்களை அனுபவிக்க சட்னி செய்து சாப்பிடலாம். நம் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே கொத்தமல்லி சட்னியை எப்படி எளிதான முறையில் செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த கொத்தமல்லி சட்னியை வெள்ளை சாதம் அல்லது இட்லி, தோசையுடன் சூடாகவும் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி இலை – தேவைக்கேற்ப
எள் எண்ணெய் – 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய் – 1 கப்
புளி – சுவைக்கேற்ப
பூண்டு – 15 பல்
பச்சை மிளகாய் – 4
சிவப்பு மிளகாய் – 10
கடலை பருப்பு – 3 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன்
கல் உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 1 எண்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எள் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
இரண்டும் பொன்னிறமாக வறுபட்டவுடன் சீரகத்தை சேர்த்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சுமார் ஒரு நிமிம் வறுக்கவும்.
அடுத்து அதனுடன் பூண்டு, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளுங்கள்.
பின்னர் அதில் தேவையான அளவு புளி சேர்த்து கலந்து கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் கல் உப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
கொத்தமல்லி இலைகள் நன்றாக சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து அவற்றை ஆறவிடவும்.
தற்போது ஆறிய அணைத்து பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிகவும் கெட்டியான சட்னியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து கடுகு வெடித்ததும் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கொள்ளவும்.
கடைசியாக அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள சட்னியில் தாளிப்பை சேர்த்து கலந்து விட்டால் சுவை மிகுந்த காரமான கொத்தமல்லி சட்னி ரெடி.