சட்டவிரோத சொத்து குவிப்பு விவகாரத்தில் தெமட்டகொட சமிந்தவின் குடும்பம் கைது
சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த விவகாரத்தில் பிரபல பாதாள உலகப்புள்ளியான தெமட்டகொட சமிந்தவின் குடும்ப உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரரான தெமட்டகொட ருவானின் மனைவி, மகன் மற்றும் சகோதரி ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் நேற்றைய தினம் (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட ருவன் என்றழைக்கப்படும் ருவன் சமில பிரசன்ன போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் மூலம் உழைத்த 1000 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை தன் குடும்ப உறவினர்கள் பெயரில் சேகரித்துள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெமட்டகொட சமிந்தவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணை
தெமட்டகொட ருவானின் மனைவி ஷானிகா லக்மினி (வயது 45) தெமட்டகொட ருவானின் சகோதரி சமந்தி நிர்மலா (48 வயது) ருவானின் மகன் 27 வயதான தரிந்து மதுஷங்க ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ருவானின் மகன் தரிந்து மதுஷங்க பலம் வாய்ந்த அரசியல் கட்சி ஒன்றின் குப்பியவத்தை தொகுதி அமைப்பாளராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று (01) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.