Dementia : மறதி நோய் ஏன் சிறு வயதிலே ஏற்படுகிறது? மரபணு காரணமா? ஆய்வுகள் கூறுவது என்ன?
டிமென்ஷியா எனப்படும் மறதிநோயை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள் என்ன?
டிமென்ஷியா மற்றும் அதுகுறித்த பிரிட்டனின் ஆய்வு கூறும் உண்மைகள், இது பல கட்டுக்கதைகளையும் உடைக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தைப் பொறுத்தவரை, தற்போது 55 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு மரபணுக்களே காரணம் என்று கூறியிருந்த நிலையில் அதற்கு இந்த ஆய்வு சவால் விடுகிறது. மேலும் இந்த ஆய்வின் அறிக்கை நோய்க்கான காரணத்தை தெரிந்துகொண்டு, மருத்துவ உதவிக்கும் வழிவகுக்கிறது.
இந்த ஆய்வுப்படி இளைஞர்களும் இந்த வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள். 65 வயதுக்கு முற்பட்டவர்களும் இந்த வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள். 30 வயதினருக்குக்கூட டிமென்ஷியா எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது.
இளம் வயதினருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்களாக மது, கல்வி, உடல் பலவீனம், ஏழ்மை, கடுமையான மதுப்பழக்கம், சமூக தனிமை, வைட்டமின் டி குறைபாடு, அதிக சி ரியாக்டிவ் புரோட்டீன் அளவுகள், காதுகேளாமை, எலும்பு கோளாறுகள், நீரிழிவு நோய், பக்கவாதம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை காரணமாகின்றன என்று ஆய்வுகள் கூறுகிறது.
65 வயதுக்கு உட்பட்ட மூன்றரை லட்சம் பேருக்கு மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் இளைஞர்களில் டிமென்ஷியா ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளது. இது தற்போது உள்ள டிமென்ஷியா தடுப்பு முன்னெடுப்புக்களுடன் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் என்று ஆய்வு அறிவுறுத்துகிறது. இந்த காரணங்களுடன் வேறு ஏதேனும் தொடர்புடையதா என்பது குறித்த ஆய்வுகள் மேலும் நடைபெறவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
டிமென்ஷியா என்றால் என்ன?
டிமென்ஷியா என்பது வளர்ந்துவரும் நரம்பியல் நோய். இது நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது. ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது. தினசரி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வதை தடுக்கிறது. சிந்திக்கும் ஆற்றலை இழக்கச்செய்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நோய் கிடையாது. இது அல்சைமர் நோய் போன்ற பல்வேறு நோய்களின் அறிகுறிகளுடன் தோன்றும்.
டிமென்ஷியா நோய் உடையவர்களுக்கு நினைவிழப்பு, குழப்பம், பேசுவதில் தடை, ஆளுமை மற்றும் மனநிலையில் மாற்றம் ஆகியவை ஏற்படலாம். இந்த நோய் முற்றினால், தினசரி பணிகளையும், தனித்து இயங்குவதையும் பாதிக்கிறது. உலகளவில் இந்த நோயும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. முன்னதாகவே இந்நோயை கண்டுபிடிப்பது, சிறந்த மருத்துவ தீர்வுகள் கொடுத்தால் இந்நோயில் இருந்து விடுபட்டு, வாழ்வியல் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். இது டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களை கவனித்துகொள்பவர்கள் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்நோய்க்கான காரணங்களை தெரிந்துகொண்டாலே இந்த நரம்பியல் கோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம். எனவே நோய் அறிகுறிகளை முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டால், முன்னதாகவே சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடையலாம்.
டிமென்ஷியாவின் ஆரம்ப கால அறிகுறிகளாக, நினைவாற்றலில் மாற்றங்கள், மறதி, பெயர்களை நினைவுகூற முடியாது, நிகழ்ச்சிகளை நினைவுகூற முடியாது. பிரச்னைகளை தீர்ப்பதில் சவால்கள். குழப்பம், சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் போவது, மனநல பாதிப்புகள், ஆளுமை மாற்றம் ஆகியவை ஏற்படும்.
திட்டமிட முடியாமல் போவது, ஒரே செயலை மீண்டும், மீண்டும் செய்வது, தெரிந்த இடத்தில் தொலைந்து போவது ஆகியவை பொதுவான அறிகுறிகள். சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகுவது, நினைவாற்றல் திறனில் தொய்வு என நபருக்கு நபர் அறிகுறிகளும் மாறுபடும். எனவே இதற்கு மருத்துவ சிகிச்சை போதிய ஆதரவு, அக்கறையும் தேவை.