டெல்லியில் 31- ம் தேதி ஆர்ப்பாட்டம்; இந்தியா கூட்டணி அறிவிப்பு..!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தினர்.
அப்போது அரவிந்த் கெஜரிவாலை 6 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பின்னா் அவருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது நீதிமன்றக் காவலில் சிறையிலோ வைக்கப்படலாம்.
எனவே, அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கேஜரிவால் பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மாா்ச் 27 ஆம் தேதிக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீதான மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து மார்ச் 31ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.