Depression : வாட்டி வதைக்கும் மனவேதனைகளால் அவதியா? அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? இதோ வழிகள்!
மற்றவர்களிடம் இருந்து உங்களை தனிமைப்படுத்திக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள். சமூக ஆதரவு மிகவும் முக்கியம். குறிப்பாக உங்கள் மனஆரோக்கியத்துக்கு அது நல்லது. உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இருக்க முயற்சியுங்கள். அது ஒரு சிறிய உரையாடலாகக்கூட இருக்கலாம் அல்லது சேர்ந்து அருகில் எங்கேனும் வெளியில் செல்வதாக இருக்கலாம். தனிமையை தவிருங்கள்.
உங்களின் எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள். நேர்மறையான எண்ணங்களை மட்டும் வளர்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் எண்ணங்கள் உண்மையான நடக்க சாத்தியமுள்ளதாக இருக்க வேண்டும். உங்களின் பலங்களை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் உழையுங்கள். சுய இரக்கம் பழகுங்கள்.
தூக்கமின்மை உங்களின் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கும். அது மனஅழுத்தத்தை இன்னும் அதிகரிக்கும். நீங்கள் வழக்கமாக தூங்கும் நேரத்தை விட்டுவிடாதீர்கள். சௌகர்யமாக உறங்கும் சூழலை உருவாக்கிக்கொடுங்கள். ஒரு நாளில் குறைந்தது 7 – 9 மணி நேர உறக்கம் இரவில் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஊட்டச்சத்து இல்லாத உணவு உங்கள் மனஅமைதியை பாதிக்கும். எனவே சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துங்கள். அதிகளவில் பழங்கள், காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், சர்க்கரை, காஃபி உணவுப்பொருட்களை சாப்பிடாதீர்கள். முடிந்தளவு தவிர்த்துவிடுங்கள்.
அதிகப்படியான மதுவும் உங்கள் மனஅழுத்தத்தை மோசமாக்கும். நீங்கள் மது பயன்படுத்துபவராக இருந்தால், கட்டாயம் உங்களுக்கு நிபுணர்களின் அறிவுரை தேவை. அவர்களால்தான் உங்களின் பிரச்னைகளை கண்டுபிடிக்க முடியும்.
வழக்கமான உடற்பயிற்சிகள் உங்கள் உடலுக்கு நன்மை அளிப்பதுடன், உங்கள் மனஅழுத்தத்தை போக்கி, உங்கள் மனநிலையை மாற்றுபவை. எனவே உங்களை மகிழ்விக்கும் அல்லது நீங்கள் விரும்பும் உடற்பயிற்சியை தினமும் கட்டாயமாக்குங்கள். அது ஒரு சிறு நடைபயிற்சியாகக் கூட இருக்கலாம்.
சுயபராமரிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதில் வாசிப்பு, விளையாட்டு, இசைக்கருவி வாசிப்பது, இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது என நீங்கள் உங்களை மனதை அமைதிப்படுத்தும் விதமாகவும், உங்களை உயர்த்தும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
தொடர்ந்து எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டுவந்தால் உங்களின் மனஅழுத்தம் அதிகமாகும். எனவே நிகழ் காலத்திலும், நடப்பு நிகழ்வுகளிலும் கவனம் செலுத்துங்கள். எனவே ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகள், தியானம் ஆகியவற்றை செய்து பயன்பெறுங்கள்.
திரையில் அதிக நேரம் செலவிடுவது, குறிப்பாக சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது, உங்கள் உணர்வுகளை பாதிக்கும். அது போதாமை மற்றும் தனிமை போன்ற உணர்வுகளை கொண்டுவரும். எனவே திரைக்கு எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொண்டுவரும் வேலைகளில் ஈடுபடுங்கள்.
நீங்கள் எல்லாவற்றிலும் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது உங்களுக்கு தோல்வி உணர்வைத்தான் தரும். எனவே உண்மையான நிறைவேறக்கூடிய இலக்குகளை நிர்ணயுங்கள். சிறிய வெற்றிகளையும் கொண்டாடுங்கள். அனைவருக்கும் பின்னடைவுகள் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மனஅழுத்தத்தில் இருந்து வெளியேறுவது மிகவும் சிக்கலான ஒன்று, எனவே மனநல நிபுணர்களிடம் தேவைப்பட்டால் அறிவுரை பெறுவது மிகவும் அவசியம். உங்கள் மனஆரோக்கியத்துக்கு தேவைப்பட்டால் அவர்கள் சிகிச்சையோ அல்லது அறிவுரைகளோ வழங்கி உங்களை ஆற்றுப்படுத்துவார்கள். எனவே கட்டாயம் இருப்பின் மனநல ஆலோசனை எடுத்துக்கொள்வது சிறந்தது.