தேவகன்யா வி.என்.ஜானகி பெயரின் சுவாரஸிய பின்னணி

நடிகை, எம்ஜிஆரின் மனைவி, முன்னாள் முதல்வர் என பன்முகம் கொண்ட வி.என்.ஜானகி கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் பிறந்தவர். இவரது தந்தை ராஜகோபால் ஐயர், தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர். இன்னும் சிறப்பாகச் சொன்னால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளர், பாடகர் பாபநாசம் சிவனின் சகோதரர்.

வி.என்.ஜானகியின் தாய் வைக்கத்தைச் சேர்ந்த நாராயணி அம்மா. 1939 இல் தனது 17 வது வயதில் மன்மத விஜயம் படத்தில் ஜானகி அறிமுகமானார். அதே வருடம் அவருக்கும் நடிகர் கணபதி பட்டுக்கும் திருமணம் நடந்தது. இதில் அவருக்கு சுரேந்திரன் என்ற மகன் உண்டு.

ஜானகி சாவித்ரி (1941), சந்திரலேகா (148) போன்ற முக்கியமான படங்களில் நடித்து பெயர் பெற்றார். நாற்பதுகளில் அவரது நடிப்பில் வெளியான முக்கியமான படங்களுள் ஒன்று, தேவகன்யா. ஒரு அரசனின் மகள் நுண்கலைகள் குறித்து படிக்க ஆசைப்படுவாள். அரசன் அதற்காக ஒரு இளைஞனை நியமிப்பார். கலைகள் சொல்லிக் கொடுக்கையில் இருவருக்குள்ளும் காதல் வளரும். காட்டிற்குச் சென்று இருவரும் தனியாக தங்களது காதல் வாழ்க்கையை மேற்கொள்வார்கள். ஒருநாள் வானிலிருந்து தோன்றும் தேவதை அந்த இளைஞனுக்கு ஒரு மந்திர கனியை பரிசளிக்கும். அத்துடன் அவனையும் ஒரு தேவனாக்கி, அவனுக்கென்று ஒரு சொர்க்கபுரியை உருவாக்கும்.

இளைஞன் தனது மனைவியை மறந்து அந்த தேவதையுடன் வாழ ஆரம்பிப்பான். கணவனைத் தேடிச் செல்லும் இளவரசி கடைசியில் களைக்கூத்தாடிகளுடன் இணைந்து கொள்வாள். ஒரு விபத்தில் அவள் இறந்து போக, அவளது சடலம் அனாதையாகப் போடப்படும். தற்செயலாக அவளது உடலைப் பார்க்கும் இளைஞனுக்கு அவனது மனைவி குறித்த நினைவுகள் மீண்டும் வரும். மந்திர கனியின் உதவியால் மனைவியை உயிர்த்தெழ செய்வான். இருவரையும் அந்த தேவதை ஆசிர்வதிக்கும்.

இதில் இளைஞனாக ஹொன்னப்ப பாகவதரும், இளவரசியாக ஜீவரத்னமும் நடித்தனர். சித்ரலேகா என்ற வேடத்தில் வி.என்.ஜானகி நடித்தார். பத்மநாபன் இயக்கிய இந்தப் படம் வெளியான காலத்தில் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகே வி.என்.ஜானகி எம்ஜி ராமச்சந்திரனுடன் இணைந்து நடித்தார். 1951 இல் கணவரை விவாகரத்து செய்த பின் எம்ஜி ராமச்ச்திரனுடன் காதல் வயப்பட்டார். 1962 இல் இருவரும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். வி.என்.ஜானகியின் மகன், சுரேந்திரன் அம்மாவுடன் எம்ஜி ராமச்சந்திரனின் ராமாவரம் தோட்டத்தில் வசித்தார்.

ஜானகியின் வி.என். என்ற இனிஷியலுக்குப் பின்னால் ஒரு கேரள சரித்திரம் உள்ளது. அந்தக் காலத்தில் நம்பூதிரி பிராமணக் குடும்பத்தின் மூத்த ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அவனது சகோதரர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. நாயர் பெண்களுடன் குடும்பம் நடத்தலாம். இதனால் நாயர் பெண்களின் வாரிசுகள் தாயின் பெயரைக் கொண்டே அடையாளப்படுத்தப்படும். மேலும், அப்பெண்ணின் வாரிசுகள் அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பார்கள். குடும்பத்தின் மூத்த ஆண் காரணவர் என்று அழைக்கப்படுவார். அவரே அனைத்தையும் நிர்வகிப்பார். ஆனால், சொத்துக்களை விற்கவோ, பங்கிடவோ முடியாது. பெயருக்கு காரணவர் இருந்தாலும், ஆண் வாரிசுகளின் சகோதரிகளே சொத்துக்களின் அதிபதிகளாக கருதப்பட்டனர். இதனை மருமக்கத்தாயம் என்பார்கள்.

பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் இந்த நடைமுறை தடை செய்யப்பட்டது. மருமக்கத்தாய பெண்களின் வாரிசுகள் அவர்களின் தாயின் பெயரிலேயே அறியப்படுவார்கள் என்பதால், தந்தை ராஜகோபால ஐயர் இருந்தும், தாய் வைக்கம் நாராயணி பெயரில் வி.என். என்ற இனிஷியல் ஜானகியின் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டது.

1943 ஜனவரி 16 வெளியாகி, வி.என்.ஜானகிக்கு பெயர் வாங்கித் தந்த தேவகன்யா திரைப்படம் நேற்று தனது 81 வது வருடத்தை நிறைவு செய்து, இன்று 82 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *