சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய் அபிஷேகம்
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய 18 ஆயிரத்து 18 நெய் தேங்காயை பெங்களூருவை சேர்ந்த பக்தர்கள் சுமந்து வந்து தந்தனர்.
பக்தர்களுக்கு உதவ கூடுதல் வனத்துறை ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மகர விளக்கு சீசனுக்காக நேற்று முன்தினம் சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.
அதை தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனரரு மகர விளக்கு கால நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பெங்களூருவில் இருந்து உன்னிகிருஷ்ணன் என்ற பக்தர் தலைமையில் 18 ஆயிரத்து18 தேங்காய்களை சுமந்து வந்தனர். இவர்கள் சன்னிதானம் அருகே தேங்காய்களை குவித்து வைத்து அதை உடைத்து நெய்யை பெரிய பாத்திரத்தில் சேமித்து அபிஷேகத்திற்கு கொண்டு சென்று கொடுத்தனர்.
பின்னர் அபிேஷகம் நடந்தது. கூடுதல் ஊழியர்கள் நியமனம் மகர விளக்கு சீசனில் பக்தர்களுக்கு உதவுவதற்காக கூடுதல் வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்களுடன் பாம்பு பிடிக்கும் சிறப்பு படையினர், யானைகளை துரத்தும்சிறப்பு படையினர், வன காவலர்கள், ஆம்புலன்ஸ் சர்வீஸ், பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்குவதற்கான சிறப்பு ஊழியர்கள், சிறப்பு மீட்புபடையினர் பம்பை – சன்னிதானம், புல்மேடு -சன்னிதானம் பாதைகளில் நியமித்துள்ளனர்.மகரஜோதி தரிசனத்திற்காக முன்னதாகவே காடுகளுக்குள் குடில்கள் அமைத்து தங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
உடல் ரீதியான பிரச்னை உள்ளவர்கள், சிறிய குழந்தைகள், முதியவர்கள் காடு வழியிலான பாதையை தேர்வு செய்யக் கூடாது என்றும், சபரிமலை வரும் அனைத்து பாதைகளுமே காட்டுக்குள் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பக்தரும் சுயமாக பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.இதற்கிடையில் சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும் பக்தர்களுக்கு உதவுவதற்காகவும் கேரள அரசின் உத்தரவுப்படி 100 தன்னார்வதொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.ஆங்கில புத்தாண்டையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18 படிகள் ஏறுவதற்கான கூட்டம் நீண்டு இருந்தது. 10:00 முதல் 12:00 மணி நேரம் பக்தர்கள் கீழ் நின்று தரிசனம் செய்தனர்.