தனுஷ்கோடி அரிச்சல்முனை கோதண்டராமர்.. விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்த தலம்.. அயோத்தி ராமருடன் தொடர்பு
ராமநாதபுரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை கோதண்டராமர் சுவாமி ஆலயம் ராமாயண காவியத்துடன் தொடர்புடையது. பிரதமர் மோடி இன்றைய தினம் தரிசனம் செய்யும் இந்த ஆலயத்திற்கு அப்படி என்ன சிறப்பு என்று பார்க்கலாம்.
வரலாற்று தொடர்புடையதும், ஆன்மீகத் தொடர்பு கொண்டதுமான புண்ணிய பூமியாக விளங்கி வருகிறது ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாத சுவாமி திருக்கோவில், அக்னி தீர்த்தம், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, திருஉத்திரகோசமங்கை, ஜடாயு தீர்த்தம், வில்லுண்டி தீர்த்தம் என பல புகழ் பெற்ற பல இடங்கள் ராமாயண காவியத்துடன் தொடர்புடையது.
ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் அழகிய கடற்கரைகளும், சிறு சிறு தீவுகளும் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை உள்ளது. வில்லைப் போன்று வளைந்த கடற்கரையை கொண்டிருப்பதால் இதனை தனுஷ்கோடி என்று அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பரந்த கடற்கரையில் தனுஷ்கோடி கடற்கரை மிகவும் அழகான ஒன்று. வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அரிச்சல் முனை அழகிய கடற்கரையானது ஒருபுறம் மன்னார் வளைகுடா, மறுபுறம் வங்காள விரிகுடாவாலும் சூழப்பட்டு இருக்கிறது.
ராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையில் உள்ள தனுஷ்கோடியில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் ஒரு நகரமே முற்றிலும் அழிந்து போனது.தனுஷ்கோடியில் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அனைத்தும் அழிந்து போனது. இந்தக் கோவில் ராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம்.