பாதி ஐபிஎல் தொடரில் விலகும் தோனி? சிஎஸ்கே அணியில் ட்விஸ்ட்.. முன்னாள் பயிற்சியாளர் அதிரடி பேச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முன் திடீரென கேப்டனை மாற்றியது. 14 ஆண்டு கால கேப்டன் தோனி பதவி விலகியதோடு, ருதுராஜ் கெய்க்வாட்டை அவரே கேப்டனாக தேர்வு செய்தார்.
இந்த மாற்றம் குறித்து சிஎஸ்கே அணி தரப்பிலோ, மற்ற சிஎஸ்கே வீரர்களோ யாரும் எதுவும் கூறவில்லை. 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனை நியமித்து இருப்பதாகவே பலரும் கருதிய நிலையில், இதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக தான் கருதுவதாக ஆஸ்திரேலிய அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி கூறி இருக்கிறார்.
அதாவது 2024 ஐபிஎல் தொடரில் தோனி, தானே கேப்டனாக இருக்கலாம் என நினைத்து தொடருக்கு தயார் ஆன நிலையில், 42 வயதான தனது உடல்நிலை முழு தொடரிலும் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக ஆட ஒத்துழைக்காது என்பதை அவர் உணர்ந்து இருக்கலாம். பாதி தொடரில் ஏதேனும் காயம், வலி அல்லது உடற்தகுதி பிரச்சனைகள் ஏற்பட்டால் தொடரில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்போது சிஎஸ்கே அணி உடனடியாக வேறு ஒரு கேப்டனை நியமித்து ஆட வேண்டி இருக்கும். அது சிஎஸ்கே அணிக்கு அழுத்தத்தை கொடுக்கும்.
அதை தவிர்க்க வேண்டி, ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்து விடலாம் என தோனி நினைத்து இருக்கலாம். அதனால் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார் என டாம் மூடி கூறி இருக்கிறார். கிரிக்கெட் உலகில் பயிற்சியாளராக நீண்ட நெடிய அனுபவம் கொண்ட டாம் மூடியின் கருத்து சரியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவரது இந்த கருத்து சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் தோனி பாதியில் விலகுவாரா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. மேலும், 2025 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பார் என நம்பிக் கொண்டு இருக்கும் சில தீவிர ரசிகர்களுக்கு இது பேரிடி செய்தியாக அமைந்துள்ளது.