தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்! சச்சினின் அப்பர் கட்! U19 World cupல் கலக்கிய சர்பிராஸ் தம்பி முசீர் கான்
உலக கிரிக்கெட்டில் எதிர்கால நட்சத்திரங்களை அடையாளம் காணுவதற்காக நடத்தப்படும் தொடர் தான் அண்டர் 19 கிரிக்கெட் தொடராகும்.
இந்த தொடரில் விளையாடி பல ஜாம்பவான்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கிறார்கள்.
ஷேவாக், விராட் கோலி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா தினேஷ் கார்த்திக், வில்லியம்சன், ஜெயசூர்யா, ரபாடா போன்ற எண்ணற்ற வீரர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம். இந்த நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் கானின் தம்பி முசிர் கான் இடம் பிடித்திருக்கிறார். சர்பிராஸ்கான் ஏற்கனவே இரண்டு அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடி பின் ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். தற்போது பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
எனினும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என தெரியவில்லை. இந்த நிலையில் சகோதரர் முசீர்கான் அண்ணனை மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். மேலும் சர்பிராஸ் கான் போல் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சையும் வீசி வருகிறார். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முசீர்கான் ஆடிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
சூப்பர் சிக்ஸர் சுற்றின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணியில் முசீர் கான் மூன்றாவது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடினார். எதிர்கொண்ட 126 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸரும் அடங்கும். இதில் முசீர்கானின் ஹைலைட்டே அவர் சச்சின் போல் விளையாடுவதும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடியிருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.