இந்த 3 காரணங்களால் தான் இந்தியாவில் டயாபடீஸ் அதிகரிக்கிறது!
சமீப வருடங்களாக இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25 மில்லியன் மக்கள் ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பதாகவும் கூறி எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். வாழ்க்கைமுறை மாற்றங்களின் காரணமாக இள வயதினரும் கூட அதிகமாக டயாபடீஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள் என மூன்றைக் கூறலாம்.
சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை :
இந்திய மக்களிடத்தில் டயாபடீஸ் அதிகரிப்பதற்கு இந்த சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை முக்கிய காரணமாகும்.
அதிகப்படியான நேரம் நாற்காலியிலேயே அமர்ந்திருந்து வேலை பார்ப்பது, மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து டிவி பார்ப்பது அல்லது மொபைல் நோண்டுவது போன்றவை காரணமாக நம்மால் எந்தவித உடல் இயக்கத்திலும் ஈடுபட முடியவில்லை. இந்தப் பழக்கம் நாளடைவில் நம் மெடபாலிஸசத்தை பாதித்து உடல் பருமனுக்கு காரணமாகிறது. டைப்-2 டயாபடீஸ் வருவதற்கு முக்கிய தூண்டுகோல் உடல் பருமனாகும் என்பதை மறவாதீர்கள்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவராக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று நேரம் காலார நடந்து செல்லுங்கள் அல்லது சற்று நேரம் எழுந்து நில்லுங்கள். தினமும் காலையில் நடைபயிற்சி செல்லுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பழங்கள், நட்ஸ், சாலட் போன்றவற்றை அதிகமாக உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் :
இரண்டாவது முக்கிய காரணம் மன அழுத்தம். அதிகமான வேலை நேரம் மற்றும் பணி அழுத்தம் காரணமாக பல இந்தியர்களும் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். அதிகமான மன அழுத்தம் நம் மனநிலையை மட்டுமல்லாமல் கார்டிசால் என்ற ஹார்மோனை உடலில் தூண்டி டயாபடீஸ் வருவதற்கும் காரணமாக அமைகிறது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு உங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் இனிப்புகளுக்கு பஞ்சமேயில்லை. எந்தவொரு திருவிழா, பண்டிகை என்றாலும் அதில் இனிப்புகள் தான் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அதோடு சேர்த்து கார்போஹைடரேட் நிறைந்த வெள்ளை அரிசி மற்றும் மைதா மாவில் செய்த பதார்த்தங்களை நாம் அதிகமாக உண்கிறோம். இதுவும் டயாபடீஸ் அதிகரிப்பதற்கு காரணமாகும்.
அதுமட்டுமின்றி நீண்ட நேரம் பணி செய்பவர்கள் இதுபோன்ற உணவுகளையே பெரிதும் நாடுகிறார்கள். இதனால் தினமும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்குப் பதிலாக ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், சிகப்பு அரிசி போன்றவற்றை உங்கள் டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற உணவுகள் உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும் சர்க்கரை சேர்த்த இனிப்புகள், பானங்களுக்குப் பதிலாக பழங்கள், நட்ஸ், யோகர்ட் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதிகப்படியான சர்க்கரை சேர்த்துக்கொள்வதற்கும் சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக பணியிடங்களில் அதிகமாக மன அழுத்தத்தில் இருக்கும் போது நமது ஹார்மோனில் மாற்றம் ஏற்பட்டு அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். அதோடு சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறையினால் எந்தவித உடல்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால், நம் உடல் எடையும் அதிகரித்து மேலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம்.