சீனாவில் விழுந்த அடி.. ஜப்பானை ரெசிஷனுக்குள் தள்ளியதா..?!
உலகின் பல நாடுகளில் ரெசிஷன் அச்சம் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதிகரித்தாலும் சில மாதங்களிலேயே தணிந்தது, ஆனால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மீது தொடர்ந்து பல்வேறு கேள்விகள், கணிப்புகள் இருந்த வேளையில் ஜப்பான் தற்போது ரெசிஷனுக்குள் தள்ளப்பட்டு உள்ளது.
சீனாவின் பொருளாதாரத் தடுமாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான் முக்கியமான ஒரு நாடு. காரணம் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பது ஜப்பான், சீனாவில் ஏற்கனவே உள்நாட்டு டிமாண்டு குறைந்தாகக் கூறப்படும் வேளையில் அந்நாட்டின் இறக்குமதிகள் அதிகளவில் குறைக்கப்பட்டது.
இதேபோல் ஜப்பான் கடல் எல்லையில் பிடிக்கப்படும் மீன்களின் இறக்குமதியும் சில காலம் சீனாவில் நிறுத்தப்பட்டது. இப்படி உணவு முதல் தொழில்நுட்பம் வரையில் சீனா, ஜப்பான் உடனான வர்த்தகத்தைக் குறைத்தது.
சீனா அமெரிக்கா உடனான வர்த்தகப் போர், பணவீக்கம், ரியல் எஸ்டேட் பிரச்சனை, பங்குச்சந்தை வீழ்ச்சி, தைவான் உடனான போர் பதற்றம் எனப் பல பிரச்சனையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் ஜப்பான் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கத் துவங்கியது.
ஜப்பான் பொருளாதார வல்லுனரின் கணக்கின் படி சீனா உடனான ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்தால் ஜிடிபி 0.4 சதவீதம் குறையும். இதேபோல் சீனாவின் ஜிடிபி 1 சதவீதம் குறைந்தால் மொத்த ஆசியாவின் ஜிடிபி 0.3 சதவீதம் குறையும்.
இந்த நிலையில் ஜப்பான் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாகக் குறைந்த வேளையில், டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாகச் சரிந்துள்ளது. இதேவேளையில் ஜப்பான் யென் மதிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு 3 மாத சரிவைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக 2 காலாண்டுகளாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவு பாதையில் இருந்தால் ரெசிஷன் எனக் கூறப்படும். ஜப்பான் பொருளாதாரம் ரெசிஷனில் மாட்டிக்கொள்ள முக்கியமான காரணமாக அந்நாட்டில் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவைச் சுட்டிக்காட்டப்படுகிறது.
2023 முதல் ஜப்பான் மத்திய வங்கி அந்நாட்டில் 23 வருடங்களாக மிகவும் தளர்வாக இருக்கும் அதன் நாணய கொள்கையைத் திருத்த முயற்சி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரெசிஷன் இந்த முயற்சிக்கு பெரும் தடை போட்டு உள்ளது. ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர கட்டாயம் தளர்வான நாணய கொள்கை அவசியமாகியுள்ளது.
இந்தியாவைப் போல் அல்லாமல் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டு உள்ளது. பல நாடுகளில் 0.25 சதவீதம் என்ற பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.