நடிச்சதுல பாதி படத்தோட டைட்டில் ஆட்டையப் போட்டதா?.. பழைய படங்களோட டைட்டிலை சுடும் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21-வது படத்தின் டைட்டில் வெயிட்டாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அமரன் என்கிற கார்த்தி படத்தின் டைட்டில் வெளியாகி இருப்பது சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அயலான் படத்தை தொடர்ந்து மீண்டும் ‘அ’ எழுத்தில் ஆரம்பிக்கும் அமரன் எனும் டைட்டிலை சிவகார்த்திகேயன் வைத்துள்ளாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
எதிர்நீச்சல் படத்தில் தொடங்கி அமரன் வரை கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் பழைய படங்களின் டைட்டில்களையே சிவகார்த்திகேயன் ஆட்டையைப் போட்டுள்ளார் என லிஸ்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சின்னத்திரையில் இருந்து சினிமா: நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பழைய படங்களின் டைட்டில்களை சீரியல்களில் தலைப்பாக வைத்து முடிந்தவரை அந்த பழைய படங்களையே திரும்ப பார்க்க கூட முடியாத அளவுக்கு முடித்து விடுகின்றனர். அதே போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயனும் தனது படங்களுக்கு பழைய படங்களின் தலைப்புகளை தேர்வு செய்து வைத்து வருகிறாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
நாகேஷ் நடித்த எதிர்நீச்சல்: கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படத்திற்கு எதிர்நீச்சல் என டைட்டில் வைத்தனர். அனிருத் குரலில் எதிர்நீச்சல் அடி பாடலும் பயங்கர ஹிட் அடித்தது. 2கே கிட்ஸ் களுக்கு எதிர்நீச்சல் என்றால் உடனடியாக சிவகார்த்திகேயன் படம் தான் நினைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் காக்கி சட்டை: மீண்டும் தனுஷ் தயாரிக்க சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படத்துக்கு காக்கி சட்டை என்று டைட்டில் வைத்தனர். கமல்ஹாசன் நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியானது. போலீஸ் அதிகாரியாக கமலுக்கு நல்லதொரு வெற்றியை கொடுத்தது அந்த திரைப்படம். ஆனால் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான காக்கி சட்டை திரைப்படம் பெரிதாக ஓடவில்லை.
ரஜினிகாந்தின் வேலைக்காரன்: இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1987-ல் வெளியான படத்தின் டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைக்காரன் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக ஓடவில்லை.
எல்லாமே பழைய டைட்டில்: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் ஹீரோ திரைப்படமான ஹீரோ படத்தின் டைட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் ஏற்கனவே வந்த டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரின்ஸ், டான் மற்றும் டாக்டர் உள்ளிட்ட தலைப்புகளிலும் ஏற்கனவே திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாவீரன்: கடந்தாண்டு மடோன்அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும் நடிகர் ரஜினிகாந்தின் படத்தின் டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் அமரன்: இயக்குநர் கே. ராஜேஸ்வர் இயக்கத்தில் நவரச நாயகன் கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான அமரன் படத்தின் டைட்டிலையே தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ் கே 21 படத்திற்கும் சிவகார்த்திகேயன் தேர்வு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் அமரர் தான் என்பதை குறிக்கும் விதமாக இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்துத்தான் கமல்ஹாசனும் ஒப்புதல் அளித்தார் எனக் கூறுகின்றனர்.