வெங்காயம், பூண்டு சேக்காமலே தக்காளி சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க…

காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதற்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? குறிப்பாக தக்காளி சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா?
தக்காளி சட்னியை பல விதங்களில் செய்யலாம். பொதுவாக தக்காளி சட்னி செய்வதாக இருந்தால், அதற்கு நிச்சயம் ஒரு வெங்காயமாவது தேவைப்படும். ஆனால் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமலேயே தக்காளி சட்னி செய்யலாம் தெரியுமா?
அதற்கு தக்காளியும், வேர்க்கடலையும் இருந்தால் போதும். அட்டகாசமான சுவையில் இட்லி, தோசைக்கு சட்னியை தயார் செய்யலாம். இந்த தக்காளி வேர்க்கடலை சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு தக்காளி வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
* வேர்க்கடலை – 1/2 கப்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 3
* புளி – 1 பெரிய துண்டு
* கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* உப்பு – சுவைக்கேற்ப
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்று வறுத்து இறக்கி, அதன் தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், சீரகம், வரமிளகாய், கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை ஒரு 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.