ஒரு அரைசதம் கூட அடிக்கலை.. அடுத்த டெஸ்டில் பேர்ஸ்டோவ் விளையாடுவாரா? மெக்கல்லம் கொடுத்த ட்விஸ்ட்!

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விளையாடுவார் என்று பயிற்சியாளர் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இதனால் 4வது டெஸ்டில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றவும், இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கவும் ஆயத்தமாகி வருகின்றன.

இருப்பினும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பல்வேறு பிரசச்னைகளை சந்தித்துள்ளது. குறிப்பாக அந்த அணியின் பேர்ஸ்டோவ் மொத்தமாக 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 102 ரன்களை மட்டுமே விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங் சராசரி வெறும் 26ஆக மட்டுமே உள்ளது.

பேஸ் பால் அணுகுமுறைக்கு இங்கிலாந்து அணி மாறிய பின் முதல் 8 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை விளாசி அனைவரையும் வியக்க வைத்தவர் பேர்ஸ்டோவ். ஆனால் இந்திய மண்ணில் சொதப்பி வருவது இங்கிலாந்து முன்னாள் வீரர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனால் 4வது டெஸ்டில் ஜானி பேர்ஸ்டோவ் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசுகையில், பேர்ஸ்டோவ் விரும்பிய அளவிற்கான ரன்களை இதுவரை இந்த டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை. அவர் மிகவும் சாதாரணமாக ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் பேர்ஸ்டோவ் பவர் ஷாட்களை விளையாடக் கூடிய கிரிக்கெட் வீரர். அதனால் அவர் பற்றிய கவலையில்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை அறிவேன். அவரின் மோசமான ஃபார்ம் என் கண்களை மறைக்காது.

ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும். அவருக்கு தேவையான நம்பிக்கை மற்றும் மன உறுதியை தான் நாங்கள் அளிக்க வேண்டியுள்ளது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவரின் கவனம் இந்திய மண்ணில் ரன்கள் சேர்ப்பதில் மட்டுமே உள்ளது. வரும் நாட்களில் பேர்ஸ்டோவுடன் கூடுதல் நேரம் செலவழிப்பேன். ஏனென்றால் இந்திய மண்ணில் ரன்கள் சேர்ப்பது அவ்வளவு எளிதானதல்ல.

அவருடன் நேரம் அதிக செலவிடும் போது பேர்ஸ்டோவால் நம்பிக்கையை பெற முடியும். அப்படி செய்யும் போது நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தோல்வியின் போது உடனடியாக ஒரு வீரரை நீக்கிவிட்டு மற்றொருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுவது எளிதானது. ஆனால் சில நேரங்களில் தயாராக இருக்கும் வீரர்களுக்கு சிறிய நம்பிக்கை அளித்தாலே ஃபார்மை மீட்டெடுத்துவிடுவார்கள். அதனால் இலக்கை மனதில் வைத்தே அணிக்குள் வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *