டயட்.. ஒர்க்அவுட் செய்தாலும் உடல் எடை குறைந்தபாடில்லையா..? இதுதான் உங்க பிரச்சனை..!

வேகமாக நகரும் வாழ்க்கை முறை மற்றும் எந்த பக்கம் திரும்பினாலும் எதிர்பாராத சவால்கள் என நமது வாழ்க்கையானது மன அழுத்தம் நிறைந்ததாக செல்கிறது. இது யதார்த்தமான ஒன்றாக இருந்தாலும் இதன் காரணமாக தற்போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, தூக்கமின்மை, பக்கவாதம், மனச்சோர்வு, நீரழிவு நோய், புற்றுநோய், மனநலம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் பல்வேறு பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மன அழுத்த ஹார்மோன்கள் நம் உடலை எப்பொழுதும் சண்டையிடும் போக்கிலேயே வைத்திருக்கிறது. சுய பாதுகாப்பிற்காக இதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நமது உடலை நாம் உட்படுத்துகிறோம். ஆனால் இந்த மன அழுத்த ஹார்மோன் வழக்கமான முறையில் நமது உடலில் உற்பத்தியாகும் பொழுது அது நாள்பட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

எண்டோகிரின் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் இந்த மன அழுத்த ஹார்மோன்கள் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி, தசைகள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை விரைவுப்படுத்துகிறது. இதனால் ஒரு வித பயம், பதட்டம் மற்றும் மனசோர்வு கூட ஏற்படுகிறது. மேலும் இது மனநிலை மாற்றங்கள், மாதவிடாயில் குறிக்கிடுதல், செரிமான பிரச்சனைகள் மற்றும் வேறு சில தீவிரமான நோய்களை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான தேவையை ஏற்படுத்துகிறது.

மனித வாழ்க்கையை தொழில்நுட்பம் இயக்கி வரும் இந்த நவீன உலகில் தேவையான அளவு ஓய்வு எடுத்து உங்கள் உடல் உங்களிடம் என்ன சொல்ல நினைக்கிறது என்பதை பொறுமையாக கேட்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மன அழுத்தம் உங்களுடைய உடல் எடையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

நாள்பட்ட மன அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்தலாம். மேலும் நாள்பட்ட மன அழுத்தம் அல்சைமர் நோயுடன் தொடர்புடையதாக அமைகிறது. இன்சுலினை போல கார்டிசோல் குளுக்கோஸ் இருப்பை மேம்படுத்துகிறது. நீண்ட நாட்களுக்கு குளுக்கோஸ் அளவுகள் அதிகமாகும் பொழுது உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் உங்களுடைய இன்சுலின் அளவுகளை அதிகரித்து, அதன் மூலமாக உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். அதன் விளைவாகவும் உங்கள் உடல் குண்டாகலாம்.

தியானம், யோகா, மசாஜ், உடற்பயிற்சி போன்றவை கார்டிசோல் அளவுகளை குறைப்பதற்கு உதவும்.

மன அழுத்தத்தால் ஏற்படும் வாழ்க்கை முறை நோய்கள் :

அதிகப்படியாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுக்கு அப்பாற்பட்ட மன அழுத்தமானது ஹைப்பர் டென்ஷன், ஹார்ட் அட்டாக், அதிக கொலஸ்ட்ரால், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் வீசிங், மூச்சுத்திணறல் போன்ற நாள்பட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

மன நலனில் ஏற்படும் தாக்கம் :

மன அழுத்தம் நமது மன நலனை பாதிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நாள்பட்ட மன அழுத்தம் போஸ்ட் டிராமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் (PTSD), பதட்டம், மனசோர்வு மற்றும் சில நேரங்களில் பேனிக் அட்டாக்குகளையும் ஏற்படுத்தலாம்.

மன அழுத்தத்தால் தசை மற்றும் சட்டக அமைப்பில் ஏற்படும் தாக்கம் :

மன அழுத்தமானது உங்களுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை வலியை உண்டாக்கலாம். மேலும் உடலில் தொடர்ந்து கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படும் பொழுது தசைகளின் வலிமை காலப்போக்கில் குறைகிறது. இதனால் வீக்கம் மற்றும் அதிகப்படியான வலி உண்டாகும்.

ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது எப்படி?

தினமும் 20 நிமிடங்களாவது பிரிஸ்க் வாக் என்று சொல்லப்படுகின்ற விறுவிறுப்பு நடைபயிற்சியை மேற்கொள்ளவும்.

இயற்கையில் நேரத்தை செலவிடவும்.

முழு உணவுகளையும், புரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடவும்.

தினமும் குறைந்தப்பட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம்.

அதிகப்படியாக மது அருந்துவதை தவிர்க்கவும், புகைப்பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்தவும், புகையிலேயே எந்த வடிவிலும் பயன்படுத்த வேண்டாம்.

டைரி எழுதுவது, உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் நேரத்தை செலவிடுவது போன்றவை மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.

யோகா, தியானம் மற்றும் பல போன்ற ஓய்வளிக்கக்கூடிய சிகிச்சைகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

கடினமான நேரங்களில் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள். உங்களுக்கு ஏற்படக்கூடிய பதட்டங்கள் மற்றும் பயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது தான். ஆனால் அவற்றிற்கு எளிமையான பதில் நிச்சயமாக இருக்கும். பதட்டப்படாமல் நிதானமாக இருந்து பொறுமையாக யோசித்து பிரச்சனைகளை சமாளியுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *