4 ஆண்டுகளுக்கு பின் சென்னை – சவூதி ஜித்தா நகர் இடையே மீண்டும் நேரடி விமான சேவை

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. அந்த விமான சேவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல பகுதிகளுக்கும் நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன.

ஆனால் ஜித்தா நகருக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் சென்னையில் இருந்து புனித உம்ரா பயணத்திற்கு செல்பவர்களும், வேலைக்காக செல்பவர்களும் குவைத், பக்ரைன், துபாய், இலங்கை வழியாக செல்ல வேண்டி இருந்தது. இதனால் சவூதி அரேபியாவிற்கு செல்ல 13 மணி நேரம் ஏற்படுவதால் நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முதல் இருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஜித்தா- சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது. இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. நேரடியாக விமான சேவை தொடங்கியதால் அதில் 215க்கும் மேற்பட்ட புனித உம்ரா பயணிகள் சென்றனர். அவர்களுக்கு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பின் இயக்குகிறது. ஜித்தாவிற்கு நேரடியாக செல்வதால் 5.50 மணி நேரத்தில் செல்லலாம். மேலும் 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவையை சென்னையில் இருந்து தொடங்க வேண்டும் என இந்திய ஹஜ் அசோஷியேஷன் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேரடி விமான சேவையை தொடங்க உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2024ம் ஆண்டு ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 17 நாள் கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு அதிகமாக கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *