மனமுடைந்த இந்திய வீரர்.. ஓய்வே கொடுக்காமல் படுத்தி எடுத்த பிசிசிஐ.. வெளியான உண்மைகள்
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனை விமர்சிக்கும் வகையில் சமீப நாட்களாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்காமல் தனியாக பயிற்சி எடுத்து வருவதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பிசிசிஐ தான் அவரது இந்த நிலைமைக்கே காரணம் என தெரிய வந்துள்ளது. என்ன நடந்தது?
2023 ஆம் ஆண்டு முழுவதும் இந்திய அணி ஆடிய அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் இடம் பெற்றார் இஷான் கிஷன். அதைத் தவிர 2023 ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றார். அதன் பின் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்றார். அந்த தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டும் துவக்க வீரராக ஆடி இருந்தார்.
2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் பாதித்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களையும் அது பெரிய அளவில் பாதித்தது. உலகக்கோப்பையில் இடம் பெற்ற இந்திய வீரர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தோல்வி தந்த துயரத்தில் இருந்து வெளியே வந்தனர்.
ஆனால், இஷான் கிஷன் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அவர் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டு இருக்கிறார். ஆனாலும், பிசிசிஐ இந்த தொடரில் ஆடுமாறு கூறியதை அடுத்து அந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய பின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
அதன் பின் இந்திய அணி அடுத்த சில நாட்களில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு கிளம்பியது. அந்த தொடரிலும் இஷான் கிஷன் இடம் பெற்று இருந்ததால் அவர் உட உடனடியாக தென்னாப்பிரிக்கா கிளம்பிச் சென்றார். மனதளவில் பாதித்த நிலையிலும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்ததால் அவர் விரக்தி நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னரே தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் இந்தியாவுக்கு கிளம்பி வந்துள்ளார். தற்போது அவர் குடும்பத்தினருடன் இருந்து கொண்டே பயிற்சி செய்து வருகிறார். அவரது பேட்டிங்கில் சில குறைகள் இருப்பதாக இந்திய அணி நிர்வாகம் கூறி இருந்த நிலையில் அதை சரி செய்ய அவர் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தான் இஷான் கிஷனை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளூர் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாடுமாறு கூறியும் அவர் அதை கேட்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. மேலும், சமீபத்தில் அனைத்து பிசிசிஐ ஒப்பந்த வீரர்களும் ரஞ்சி ட்ராபியில் ஆட வேண்டும் என வந்த உத்தரவும் இஷான் கிஷனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ற தகவல் வலம் வந்தது.
ஆனால், இந்த தகவல்கள் எதிலும் உண்மை இல்லை எனவும், பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு இஷான் கிஷன் நிலை என்ன என்பது புரிந்தே அவரை பயிற்சி செய்ய அனுமதித்து இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அடுத்து அவர் மும்பை மாநில டி20 தொடரில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.