தவித்த அஸ்வின்.. பறந்து வந்த தனி விமானம்.. யார் அனுப்பியது தெரியுமா? மிரள வைத்த முக்கிய புள்ளி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில் போட்டியில் இருந்து விலகி இருந்தார். அவரது தாயை மருத்துவமனையில் சேர்த்து இருந்ததால் அவர் போட்டி நடந்த ராஜ்கோட்டில் இருந்து சென்னை சென்றார்.
அதன் பின் போட்டியின் நான்காம் நாள் மதியம் அவர் மீண்டும் ராஜ்கோட் வந்து சேர்ந்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அவர் சில ஓவர்கள் பந்து வீசவும் செய்தார். ஆனால், அவர் எப்படி உடனடியாக சென்னை கிளம்பிச் சென்று, பின் ஒரே நாளில் ராஜ்கோட் திரும்பினார்? அவருக்கு எப்படி அவர் எதிர்பரர்த்த நேரத்திற்கு விமானம் கிடைத்தது?
இதன் பின்னணியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருக்கிறார். அஸ்வின் உடனடியாக சென்னை கிளம்ப வேண்டும் என சொன்ன உடன் ஜெய் ஷா பிசிசிஐ சார்பில் ஒரு தனி விமானத்தை அஸ்வினுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறார். அதே விமானத்தில் மறுநாள் அஸ்வின் ராஜ்கோட் கிளம்பி வந்திருக்கிறார்.
இந்த விஷயத்தை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போட்டி வர்ணனையின் போது கூறினார். அத்துடன் பிசிசிஐயின் இந்த செயல் மிகப் பெரிய நம்பிக்கையை இந்திய வீரர்களுக்கு அளிக்கும். நாம் சிறப்பான ஒரு இடத்தில் இருக்கிறோம் என அவர்களுக்கு இது போன்ற செயல்கள் நினைவுபடுத்தும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் இன்னும் பல உயரங்களுக்கு செல்லும் என பாராட்டித் தள்ளினார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதன் பின் சென்னை திரும்பினார். மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸ் முடியும் தருவாயில் அணிக்கு திரும்பிய அவர் 6 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் திரும்பி வராமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், அவர் இந்திய அணிக்காக ஆடுகிறோம் என்பதை உணர்ந்து தன் சூழ்நிலைகளை பொறுத்துக் கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பியதையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.