கலாய்த்த ரசிகர்கள்.. தண்ணீர் பாட்டிலால் அடிக்க கை ஓங்கிய பாபர் அசாம்.. என்ன இப்படி கோபம் வருது!
பிஎஸ்எஸ் தொடரின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கலாய்ப்பதை பொறுத்து கொள்ள முடியாத பாபர் அசாம், அவர்களை நோக்கி தண்ணீர் பாட்டியலை கொண்டு அடிக்க கைஓங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடரை போல் பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பேஷாவர் சால்மி அணியின் கேப்டனாக பாபர் அசாம் செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் பேஷாவர் சால்மி அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து பேஷாவர் சால்மி அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பேஷாவர் சால்மி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் கேப்டன் பாபர் 26 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதையடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பேஷாவர் சால்மி அணி வெற்றிபெற்றது.
இந்த போட்டியின் போது பாபர் அசாம் பவுண்டரி எல்லையில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சில ரசிகர்கள் பாபர் அசாமை பார்த்து ஜிம்பாப்வே, ஜிம்பாப்வே என்று கோஷம் எழுப்பி கலாய்த்தார்கள். ஒரு கட்டத்தில் “ஜிம்பாப்வே” கோஷம் அதிகமாக வர, பாபர் அசாம் பொறுமையை இழந்தார்.
ஜிம்பாப்வே கோஷத்தை எழுப்பும் ரசிகரை பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசுவேன் என்று மிரட்டினார். இதனால் சூழல் பதற்றமாக மாறியது. பாபர் அசாம் ரசிகர்களை நோக்கி அடித்துவிடுவேன் என்று மிரட்டிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. பாபர் அசாம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே ரன்களை சேர்ப்பார் என்று கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
https://twitter.com/nibraz88cricket/status/1761312465164329005
ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு பின் பாபர் அசாம் கேப்டன்சியை ராஜினாமா செய்த நிலையில், பேட்டிங்கிலும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதேபோல் அணி நிர்வாகமும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதால், பாபர் அசாமின் செயல்பாடுகள் மோசமாகி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.