ஏது திமுகவிடம் 21 தொகுதிகள் கேட்கிறோமா? அப்படியெல்லாம் இல்லைங்க! காங்கிரஸ் மறுப்பு!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியல் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை ஆதாரமற்ற பட்டியல் எனக் கூறி தமிழக காங்கிரஸ் கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை திமுக வழங்கியது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, என 9 தொகுதிகளில் தேனியை தவிர்த்து 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை தமிழக காங்கிரஸ் கேட்பதாக கூறப்படுகிறது.
15 தொகுதிகள் வரை திமுகவிடம் காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் திமுகவிடம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் இன்று காலை வெளியானது. மேலும், நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம், ஆகிய 12 தொகுதிகளை வரும் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பரபரப்பு மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா பெயரில் விடுக்கப்பட்டுள்ள மறுப்பு அறிவிப்பு வருமாறு; ”2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்.”
காங்கிரஸ் தரப்பில் பதறிப்போய் இப்படியொரு மறுப்பு அறிக்கை வெளியிடவே தேவையில்லை என்ற போதிலும் மறுப்பு தெரிவித்திருப்பது விந்தையாக பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீட்டின் போது கூடுதலாக தொகுதிகள் கேட்பதும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி இல்லையென்று சொல்வதும் வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.