லோக்சபா தேர்தல் களத்தில் ஜரூராக குதித்த திமுக! சீனியர்ஸ் + ஜூனியர்ஸுடன் குழுக்கள் அதிரடி அறிவிப்பு!
சென்னை: லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் களத்தில் திமுகவும் ஜெகஜோதியாக இறங்கிவிட்டது. திமுகவின் சீனியர்கள், ஜூனியர்களை உள்ளடக்கிய பல்வேறு தேர்தல் குழுக்களை ஒரே நாளில் அதிரடியாக அறிவித்துள்ளது திமுக தலைமை.
லோக்சபா தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் அறிக்கை குழு: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக இன்று தேர்தல் அறிக்கை குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றை அதிரடியாக ஒரே நாளில் அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை குழு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா மற்றும் கோவி செழியன், கேஆர்என் ராஜேஷ்குமார், சிவிஎம்பி எழிலரசன், எம்எம் அப்துல்லா எம்பி, டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோருடன் சென்னை மேயர் பிரியாவும் இடம் பெற்றுள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு: திமுகவின் லோக்சபா தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை குழு: திமுக தற்போது “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், கொமதேக, தவாக உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா எம்பி, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சீனியர்ஸ், ஜூனியர்ஸ்: திமுகவின் ஒவ்வொரு குழுவுமே கட்சியினர் சீனியர்கள் பிளஸ் ஜூனியர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் அதிரடியாக இன்று தேர்தல் குழுக்களை திமுக தலைமை அறிவித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
2019-ம் ஆண்டு தேர்தல்: கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் தற்போதைய திமுக கூட்டணி கட்சிகளே ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இந்திய ஜனநாயக கட்சி மட்டும் தற்போதைய தேர்தலில் திமுக அணியில் இல்லை. 2019 லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட 20 இடங்களில் 20 தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 9 இடங்கள் வழங்கப்பட்டன. இதில் 8 இடங்களில் அக்கட்சி வென்றது. சிபிஐ, சிபிஎம் ஆகியவை போட்டியிட்ட 4 இடங்களிலும் வென்றன. விசிக போட்டியிட்ட 2 இடத்திலும் வென்றது.