DMK vs BJP: ’உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது!’ எல்.முருகன் காட்டம்!

கோயம்புத்தூர்-பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவையை மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை, இது உடனடியாக ரயில்வே அமைச்சரிடம் எடுத்து சென்று ஒரே மாதத்தில் ஒப்புதல் பெற்று ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டுமே ரயில்வேவில் தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தரப்பட்டுள்ளது. காங்கிரஸ்-திமுக ஆட்சியில் வெறும் 800 கோடி ரூபாய்க்கு மட்டுமே தமிழ்நாட்டுக்கு ரயில்வே நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகிறோம் என கூறினார்.
அப்பன் என்ற வார்த்தை கெட்டவார்த்தையா என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலின் ஒன்னும் கருணாநிதி கிடையாது. இவர் அந்த அளவுக்கான ஆள் கிடையாது. அரசியலில் இவர் ஒரு கத்துக்குடியாக உள்ளார்.
அரசியலில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. மத்திய அரசோடு இணைந்து வேலை செய்யும்போது தமிழ்நாடு அரசுக்குதான் பலன் கிடைக்கும். அமைச்சருக்கான தராதரத்தை அவர் குறைத்துவிட்டார்.
வெள்ளம் பாதிப்பு என்றால் முதன் முதலில் நிற்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ்தான். மத்திய அரசின் பேரிடர் மீட்பு படை, ராணுவம், ரயில்வே உள்ளிட்டவை இணைந்து வெள்ளம்பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டோம் என எல்.முருகன் தெரிவித்தார்.