திமுகவின் ஏடிஎம் ஏ.வ.வேலு.. காவி வேட்டி கட்டி ஏமாற்றுபவர் சேகர் பாபு! அமைச்சர்களை இழுத்த அண்ணாமலை

திருவண்ணாமலை: திமுகவின் ஏடிஎம் ஆக அமைச்சர் ஏ.வ.வேலு இருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

 

திருவண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மத்தியில் உரையாற்றினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் தற்போது கல்வித் தந்தையாகிவிட்டார்கள். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏழை, எளிய மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியைக் கொடுத்து, அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்.

மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வி அமைச்சர். அவருக்கு ஏழை மாணவர்களுக்கான கல்வித் தேவைகள் புரிய வாய்ப்பில்லை. இந்தியா முழுவதுமே மாநில அரசுகள், மத்திய அரசின் இலவசக் கல்வி வழங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கேட்கும்போது, தமிழக அரசு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை வேண்டாம் என்கிறது. மத்திய அரசின் உலகத் தரம் வாய்ந்த, மாணவர்களுக்கு, கல்வி, சீருடை, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளுக்கு திமுக அரசு அனுமதி கொடுத்தால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர பாஜக முயற்சிகள் எடுக்கும்.

அமைச்சர் எ.வ.வேலு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்து நடத்தி வரும் பள்ளிகளின் கல்வித் தரத்துக்கும், நவோதயா பள்ளிகளின் கல்வித் தரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை பரிசோதித்து, எது குழந்தைகளுக்குத் தேவையானது என்று முடிவெடுக்கலாம். நவோதயா பள்ளிகளில் உலகத் தரத்திலான இலவசக் கல்வி பெறும் மாணவர்கள் இன்று உலக அளவிலான போட்டித் தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற கல்வி வழங்கும் திமுக அரசு, நீட் தேர்வை வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளில், ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 5. ஆனால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக நடத்திக் கொண்டிருக்கும் நாடகம்தான் தான் நீட் அரசியல். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்துக்கு வழங்கியுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் 15.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *