முதலீட்டாளர்களே மொமெண்டம் இன்வெஸ்டிங் பற்றி தெரியுமா? லாபம் அள்ளித்தரும் ஒரு உத்தி!
பங்குச்சந்தை முதலீடுகளை பொறுத்தவரை முதலீட்டாளர்கள் அவர்களுக்கென தனித்தனி உத்திகளை வைத்திருப்பார்கள். சிலர் தினமும் டிரேடிங் செய்வார்கள், சிலர் வாரத்தின் குறிப்பிட்ட நாளில் டிரேடிங் செய்வார்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு வின்னிங் ஃபார்முலா இருக்கும். அப்படி ஒரு முதலீட்டு உத்தியை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மொமெண்டம் இன்வெஸ்டிங் (Momentum Investing): பரவலாக முதலீட்டாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அணுகுமுறை தான் இது. குறிப்பிட்ட காலத்தில் வளர்ச்சியில் இருக்கும் பங்குகளை வாங்குவதற்கு முன்னுரிமை தருவது. அந்த பங்கு கீழ் நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் தென்படும்போதே விற்றுவிடுவது. இதில் காத்திருப்பு காலம் என்ற கான்செப்ட் இருக்காது.
பங்கின் போக்கினை அடிப்படையாக கொண்ட நம்பிக்கை தான் இது. அதாவது ஒரு பங்கு வளர்ச்சி பாதையில் செல்கிறது என்றால் திடீரென அது வீழ்வதற்கான வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பங்கு வர்த்தகம் என கூறலாம்.
இதற்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஒப்பீட்டு வலிமை குறியீடு, விளக்கப்படங்களை கொண்டு ஆய்வு செய்து இதனை தீர்மானிக்க முடியும்.
மற்ற அணுகுமுறைகளை விட லாபமானதா?: பொதுவாக ஒரு நிறுவனத்தை எடுத்து அதனை முழுமையாக ஆய்வு செய்து அந்த பங்குகளின் வரலாற்றை பார்த்து முடிவெடுப்பது போன்ற அணுகுமுறைகளை விட மொமெண்டம் டிரேடிங் எனப்படும் குறிப்பிட்ட கால டிரெண்டிற்கு ஏற்ப பங்கு வர்த்தகம் செய்து லாபம் காண்பது எளிதானதாக இருக்கிறது.
மொமெண்டம் முதலீட்டாளர்கள், ஒரு பங்கின் போக்கு, ஏற்றம் அல்லது வீழ்ச்சி என எந்த வடிவம் எடுத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கும் என நம்புகின்றனர். இந்த உத்தியை கொண்டு வளர்ந்து வரும் பங்குகளை வாங்குகின்றனர், சரிய தொடங்கும் பங்குகளை விற்கின்றனர்.
முதலீட்டாளர் உளவியலை இந்த உத்தி பயன்படுத்தி கொள்கிறது என்பதே உண்மை. ஒரு வித கூட்ட மனப்பான்மையை ஏற்படுத்தி, மற்றவர்களையும் அதே பங்குகளை வாங்க வைக்கும். இதனால் மொமெண்டம் முதலீட்டாளர்கள் ஒரு பங்கின் போக்கை வலுவானதாக உணர்ந்து வாங்கும் போது மற்ற முதலீட்டாளர்களும் மறைமுகமாக கைகொடுக்கின்றனர். இது மேலும் லாபத்தை பெற்று தருகிறது.
அபாயங்கள் என்னென்ன?: எந்த ஒரு முதலீட்டு அணுகுமுறையிலும் உள்ளதைப் போலவே மொமெண்டம் முதலீட்டு முறையிலும் அபாயங்கள் உள்ளன. ஏனெனில் பங்குச்சந்தையின் போக்கை யாராலும் எளிதாக கணிக்க முடியாது. திடீரென அந்த குறிப்பிட்ட பங்கு சரியத் தொடங்கினால் பெரிய அளவிலான இழப்புகள் நேரிடும் அபாயம் உள்ளது.
சமீபத்தில் விலை உயர்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குகிறார்கள், உயர்வு போக்கு தொடரும் என எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அது தலைகீழாகும் வாய்ப்பும் மிக அதிகம். பொருளாதாரத் தரவுகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் முதலீட்டாளரின் மனநிலையை விரைவாக மாற்றும் வலுவான போக்குகள் கூட விரைவாக சரியத் தொடங்கலாம்.
சந்தை ஏற்ற இறக்கம்: சந்தை ஏற்ற இறக்கத்தில் முதலீடு செய்வது என்பது உங்கள் முதலீட்டின் மதிப்பை அடிக்கடி மாற்றும். ஏனெனில் இவை குறுகிய கால போக்குகளை கடைபிடிக்க கூடியவை. இது முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் கணிசமான ஏற்ற இறக்கங்களை காட்டி கொண்டே இருக்கும். ஒரு நிலையான முதலீட்டு பயணத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பொருந்தாது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எத்தகைய முதலீட்டு உத்திகளை எடுத்துக் கொண்டாலும் அதில் உள்ள அபாயங்களையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையின் போக்கு என்பதை யாராலும் தீர்மானித்து விட முடியாது.